தோட்டங்களில் பறிக்கப்படும் தேயிலை கொழுந்துகளை நிலுவை செய்யும் முறையில் முறைகேடு நடப்பதாக தெரிவித்து வேலை நிறுத்த பேராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹட்டன் போடைஸ் தோட்ட தொழிலாளர்கள் இன்று தொழிலாளர் தேசிய சங்க தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரத்தைச் சந்தித்து தமது கோரிக்கைகளுக்கு தீர்வினை பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தொழிலாளர்களின் கோரிக்கைகளை செவிமடுத்த அமைச்சர் உரிய தோட்ட அதிகாரிகளுடன் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கமளித்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தின் போது வருகைதந்திருந்த அனைத்து தொழிற்சங்க தரப்பினதும் இணக்கப்பாட்டிற்கு ஏற்ப பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
1. தோட்டங்களில் தேயிலை கொழுந்துகளை நிலுவை செய்வதற்கு நவீன தொழில் நுட்ப முறைகளை அறிமுகப்படுத்துவற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை.
2. ஆனாலும் நவீன தொழில் நுட்பம் என்ற போர்வையில் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது.
3. அறிமுகப்படுத்தபட்டுள்ள புதிய முறையால் தராசின் நியம அளவினை மாற்றியமைக்க கூடிய ரிமோட் கன்ட்ரோல் முறை குறித்த சந்தேகம் நிவர்த்தி செய்யப்படவேண்டும்.
4. தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் கொழுந்தின் அளவை பதிவு செய்யும் டிஜிட்டல் கார்ட் முறைக்கு மேலதிகமாக வழமையாக நிறைகளை பதிவு செய்து கொடுக்கும் எழுத்திலான பட்டியல் படிவம் வழங்கப்படவேண்டும்.
மேலுள்ள கோரிக்கைகள் குறித்து தோட்ட முகாமைத்துவம் ஆராய்ந்து தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் புதிய முறை உறுதிபடுத்தப்படும் வரை அதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் இதுவரை பழைய முறையிலான தொழிலாளர்களுக்கு பழக்கமான முறைமையினை தொடர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு தோட்ட நிர்வாகம் செயற்படும் பட்சத்தில் உடனடியாக வேலைநிறுத்தத்தை கைவிடுவது எனவும் இல்லாவிட்டால் உரிய தீர்வு கிடைக்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேற்படி சந்திப்பில் நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் எஸ். திலகராஜ், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொது செயலாளர் எஸ். பிலிப், உபதலைவர் எஸ் நகுலேஸ்வரன,; இலங்கை தொழிலாளர் சங்க அமைப்பாளரும் முன்னாள் அமபகமுவ பிரதேச சபை உறுப்பினருமான ராஜேந்திரன், மலையக மக்கன் முன்னனி தொழிலுறவு அதிகாரிகள் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்களின் தோட்ட கமிட்டி தலைவர்களும் கலந்துகெண்டனர்.