தமிழில் குளோபல் தமிழ் செய்திகள்
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ராம்ப் வெற்றியீட்டியமைக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல்வாதியான ராஜித சேனாரட்ன மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார். (அரச தலைவர்கள் மரபு ரீதியாக வாழ்த்துவது வேறும் விடயம்) இனி அமெரிக்கா ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யாது என ராஜித சேனாரட்ன மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். இதேவிதமான கருத்தை இலங்கையின் மற்றுமொரு அரசியல்வாதி வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் ட்ராம்ப் முன்வைத்த காரணிகள் முழு உலகிற்கும் பொருந்தக் கூடியது எனவும், ட்ராம்ப் தனி நாடுகளின் இறையாண்மையை மதித்து செயற்படுவார் எனவும் புதிய உலக மரபு உருவாகும் எனவும் மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
இரண்டு பக்கங்களில் இருந்தாலும் இந்த அரசியல்வாதிகள் இருவரும் சொல்வது மிகப்பெரிய பொய்களேயாகும். இதன் மூலம் ராஜிதவிற்கும் மஹிந்தவிற்கும் ட்ராம்ப் பற்றி கடுகளவும் தெரியாது அல்லது தெரிந்தும் ட்ராம்பின் வாலில் தொங்க முயற்சிக்கின்றனர் என்றே கருதப்பட வேண்டும்.
ட்ராம்ப்பின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதான எதிரி நாடுகளாக கூறப்பட்ட இரண்டு நாடுகள் மஹிந்த ஆட்சிக் காலத்தின் மிக நெருங்கிய நட்பு நாடுகளாகும். அவை சீனாவும் ஈரானுமாகும். ஈரானுடன் ஒபாமா அணுவாயுதங்களை தடுக்கும் நல்லிணக்க முனைப்புக்களைப் போன்றே, வெளிநாடுகளை உள்ளடக்கிய சீனாவின் பொருளாதாரக் கொள்கைகள் ட்ராம்பினால் கடுமையாக தாக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த நிலைமை அழிவை நோக்கி நகர்கின்றது. பெரும்பாலும் கியூபாவுடன் ஒபாமா ஏற்படுத்திக் கொண்ட நல்லிணக்கத்தை ட்ராம்ப் சிதைவடையச் செய்யக்கூடும். இலங்கையின் ராஜதந்திர நட்பு நாடாக கருதப்படும் மெக்ஸிக்கோவும் ட்ராம்பின் எதிரி நாடாகும். அமெரிக்க வாழ் லத்தின் அமெரிக்கர்கள் ட்ராம்ப்பை பாலியல் குற்றவாளி என்றும் போதைப் பொருள் வர்த்தகர் என்றுமே அழைத்தனர்.
ட்ராம்ப்பின் கீழ் பதிய உலக மரபு ஒன்று உருவாக்கப்பட்டால் அது அமெரிக்காவை அதிகார மையமாகக் கொண்டு ஓர் மரபமாக அமையும். சீனா மீதான தாக்குதல்களின் அர்த்தம் அதுவேயாகும். உலகிற்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு உதவிகள் ட்ராம்பின் ஆட்சியின் கீழ் முடக்கப்படும் என கருதப்பட முடியும். நேரடி நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ட்ராம்ப் உதவிகளை வழங்க முன்வருவார்.
ட்ராம்பின் புதிய உலக மரபு ஜனாதிபதி தேர்தலின் போது அவர் கூறியதனைப் போன்று அணுவாயுத பயன்பாட்டு அச்சுறுத்தலின் அடிப்படையிலானதாகவே அமையும். மத்திய கிழக்கில் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வரும் நாடுகளில் புதிய யுத்தமொன்றை ட்ராம்ப் முன்னெடுப்பார் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் பயன்படுத்தப்படும் மிகவும் மோசமான ஆயுதங்களுடன் இந்த யுத்தம் மேற்கொள்ளப்படலாம்.
ட்ராம்பின் புதிய உலக மரபின் மற்றுமொரு ஆபத்தாக இயற்கை வளப் பாதுகாப்பு தொடர்பில் அண்மையில் பாரிஸில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையிலிருந்து அமெரிக்காவை விலக்கிக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படலாம். தேர்தல் காலத்திலும் இது பற்றி ட்ராம்ப் கூறியிருந்தார். அவ்வாறு அமெரிக்கா உடன்படிக்கையிலிருந்து நீங்கினால் இயற்கை வள அழிவுகளை தடுத்து நிறுத்த முடியாத நிலைமை உருவாகும்.
ராஜித சேனாரட்ன மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் டொனால்ட் ட்ராம்பிடம் மற்றுமொன்றையும் எதிர்பார்க்கின்றனர். மனித உரிமை விவகாரங்களில் அமெரிக்கா அமைதி பேணும் என எதிர்பார்க்கின்றனர். நாம் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் அமெரிக்காவுடன் ஒரு விடயத்தில் இணங்க வேண்டியிருக்கின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் நிறைவேற்றப்பட்டது என்பதனை மறந்து விடக் கூடாது. அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி ஆட்சி செய்திருக்காவிட்டால் இலங்கை விவகாரம் மனித உரிமைப் பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருக்க வாய்ப்பு குறைவு என்பது மெய்யானதாகும்.
ராஜித சேனாரட்ன மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் இந்த எதிர்ப்பார்ப்பு ட்ராம்பின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்படக்கூடிய சாத்தியங்கள் அதிகமாகவே காணப்படுகின்றது. உதாரணமாக வழக்கு விசாரணை இன்றி 4000 பேர் கொல்லப்பட்டு , இவ்வாறு பத்து லட்சம் பேர் வரையிலும் கொல்லத் தயார் எனக் கூறும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ துதெருக்கு எதிராக எவ்வித விமர்சனங்களையும் அமெரிக்கா வெளியிடாமல் இருக்க சாத்தியமுண்டு.
இலங்கை மனித உரிமை விவகாரங்களில் சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருக்காவிட்டால் இன்னமும் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிப் பீடத்தில் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. மரித்துப் போய்க்கொண்டிருக்கும் அந்த அழுத்தங்களுக்கு தற்போது இடி விழுந்துள்ளது. இனி யுத்தக கால மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறும் விவகாரங்கள் வெறும் வார்த்தைகளுக்கு மட்டுப்பட்டதாகவே அமைந்துவிடக் கூடிய சாத்தியங்கள் மிகவும் அதிகமாகும். வலுவான உள்ளுர் அழுத்தங்களின் ஊடாகவன்றி சர்வதேச அழுத்தங்களை நம்பியிருப்பது பயனளிக்கக்கூடியதல்ல.
ட்ராம்ப் ஜனாதிபதியாக தெரிவானமை உலக அழிவாக கருதப்பட முடியாது என்ற போதிலும், ட்ராம்ப் அந்த அளவிற்கு அழிவை ஏற்படுத்தக் கூடிய ஆணவம் மிக்க ஓர் தந்திர அரசியல்வாதியாவார். படிப்பறிவற்ற, கிராமிய மற்றும் வெள்ளை அமெரிக்க பெரும்பான்மை மக்களின் பிரதிநிதியாகவே ட்ராம்ப் திகழ்கின்றார். இவ்வாறான ஓர் நபர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இதுவரையில் நியமிக்கப்பட்டதில்லை. ட்ராம்ப் பிரதிநிதித்துவம் செய்த குடியரசுக் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு வாக்களிக்கவில்லை. ட்ராம்பினால் ஏற்படுத்தப்படக்கூடிய பாரியளவிலான பொருளாதார மற்றும் சமூக அழிவுகளை கருத்திற் கொண்டே இவ்வாறு வாக்களிக்கவில்லை.
ஐக்கிய அமெரிக்க என்பது பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக உலகப் பலம்பொருந்திய முக்கி நாடாகும். இதனால் அமெரிக்காவின் இந்த அரசியல் மாற்றம் ஒட்டுமொத்த உலகையுமே பாதிப்புக்கு உள்ளாக்கும். இதன் பாதிப்புக்கள் உடனடியாகவே அனுபவிக்க நேரிடும். ஐரோப்பா முழுவதிலும் தற்போது ஏற்பட்டுள்ள இனவாத மற்றும் புகலிடக் கோரிக்கையாளர் விரோத செயற்பாடுகள் இந்த ஆட்சி மாற்றத்தினால் தீவிரமடைந்து அழிவுகள் ஏற்படக் கூடும்.
ட்ராம்பின் வெற்றியைத் தொடர்ந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ‘நாட்டை மீளக் கட்டியெழுப்புவோம்’ என்ற டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுவும் தெற்கு இனவாதத்தின் ஒர் வெளிப்பாடேயாகும்.
2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் திகதி ட்ராம்ப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் பாரிய அழிவுகளை பார்க்கக் கூடியதாக இருக்கும்.
எவ்வறெனினும், உலக வரலாற்றில் இவ்வாறு மானுடத்திற்கும் மனித நேயத்திற்கும் பின்னடைவுகள் ஏற்பட்ட போதிலும் மீளவும் அவை வீறு கொண்டு வெற்றி முடி சூட்டிய பல சந்தர்ப்பங்கள் வராற்றுப் பாடங்களின் ஊடாக கண்கூடாகியுள்ளது.
குறிப்பு: சிரேஸ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய இணைய தளமொன்றுக்கு எழுதிய பத்தியயொன்றின் தமிழக்கம்
தமிழில் : ககுளோபல் தமிழ் செய்திகள்