குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த தனியார் பேரூந்து உரிமையாளர்களது நீண்ட நாட்கள் தீர்க்கப்படாமல் இழுபறிநிலையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கோடு, வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் விசேட விசாரணை ஒன்றை கடந்த 09-11-2016 திகதியன்று மன்னார் மாவட்டத்தில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் முற்பகல் 11 மணியளவில் ஏற்பாடு செய்திருந்தார்.
குறித்த விசாரணைக்கூட்டத்திற்கு வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் அ.நிக்கொலஸ்பிள்ளை, வட இலங்கை தனியார் பேரூந்து சங்கங்களின் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரும் அத்தோடு ஐந்து மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்களது சங்கங்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த விசேட ஒன்றுகூடலில் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பிரச்சினைகள் உள்ள உரிமையாளர்கள் வருகைதந்து தத்தமது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடினர், குறிப்பாக அங்கு இடம்பெற்ற விசாரணைகளின்போது பல உரிமையாளர்கள் தமது அனுமதிப்பத்திரங்களை சட்ட முரணாக நீண்ட காலம் வேறு நபர்களுக்குக் கொடுத்திருந்தமையும், பலர் வழி அனுமதிப்பத்திரங்களை விற்பனை செய்திருந்தமையும் தெரியவந்துள்ளது.
குறித்த பிணக்குகள் உரிய முறையில் விசாரணை செய்யப்பட்டு பாரிய முறைகேடுகள் செய்தவர்களது வழி அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதுப்பிக்கப்படவேண்டியிருந்த பல அனுமதிப்பத்திரங்கள் நேற்றயதினம் புதுப்பித்துக்கொடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில் மேற்படி அதிரடி நடவடிக்கையினால் இன்னும் பல வருடங்களுக்கு பிரச்சினை இல்லாது போக்குவரத்தை கொண்டுசெல்ல முடியுமெனவும், அதே நேரம் உரிமையாளர்களும் நிம்;மதியுடன் தமது சேவைகளை மக்களுக்கு வழங்க முடியுமெனவும், இனிமேல் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வைத்திருப்போர் மட்டுமே தனியார் போக்குவரத்து சங்கங்களில் அங்கத்தவர்களாக இருக்கமுடியும் என்பதால் தேவையற்ற பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்புக்கள் இருக்காது எனவும் கூறினார், அத்தோடு எவரும் சட்டமுரணாக வழி அனுமதிப்பத்திரத்தை மற்றவர்களுக்கு இனிமேல் விற்பனை செய்வார்களாயின் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படுமெனவும் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் நீண்ட காலமாக தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணமுடியாது கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த உரிமையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அமைச்சர், அதிகார சபையின் தலைவர் மற்றும் ஊழியர்கள், தனியார் சங்கங்களின் தலைவர்கள் ஆகியோர் தமது நேரத்தையும் பொருட்படுத்தாது இரவு 11 மணிவரை சேவையிலும், விசாரணையிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது