தென் கொரிய ஜனாதிபதியான பார்க் குன் ஹை பதவி விலக வேண்டும் எனக் கோரி தலைநகர் சோலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 3 வாரங்களாக நடை பெற்று வருகின்ற இந்தப் போராட்டத்தில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தில் மொத்தம் 9 லட்சம் பேர் பங்கேற்றதாக ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் அதைவிட குறைந்த எண்ணிக்கையில் பொதுமக்களே பங்கேற்றுள்ளதாக காவல்துiயினர் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியின் நெருங்கிய தோழியாக இருந்த சோய் சூன்-சில் ஜனாதிபதியை தவறாக வழிநடத்தியதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். ஊழலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட சோய் தற்போது தடுப்புக்காவலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றத்தை ஒப்புக்கொண்ட பார்க் குன் கடந்த ஒக்டோபர் மாதம் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியிருந்த போதும் அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.