குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இலங்கையில் இரகசிய சித்திரவதை கூடங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் பிரதிநிதியும், சர்வதேச உண்மை மற்றும் நீதி அமைப்பின் தலைவருமான யஸ்மீன் சூகா கோரியுள்ளார். வெள்ளைவான் கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்று வரும் சித்திரவதைகள் தொடர்பில் அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் அமைப்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. தமிழர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாத நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சித்திரவதைகள் வன்கொடுமைகள் படையினரின் மரபணுவில் ஊறிப்போன விடயமாக மாற்றமடைந்துள்ளதாகவும் ஆட்சி மாற்றம் வந்தாலும் படைவீரர்களின் குற்றச் செயல்களில் குறைவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் சித்திரவதைகள் இடம்பெறுவதனை உலகிற்கு எடுத்தியம்ப விரும்புவதாக சூகா தெரிவித்துள்ளார்.