இலங்கை பிரதான செய்திகள்

மட்டக்களப்பி்ல் அரச உத்தியோகத்தரை தூற்றிய தேரர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

east-cm_ci

மட்டக்களப்பில் பௌத்த தேரர் ஒருவர் அரசாங்க உத்தியோகத்தர் ஒருவருக்கு தகாத வார்த்தைகளையும் இனத் துவேச ரீதியாகவும் ஏசியுள்ள சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் குறித்த தேரர்  மீது சட்ட நடவடிக்ைகை எடுக்குமாறு  பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

இனவாத செயற்பாடுகளுக்கு ஒரு போதும் இடமளிக்காதவன் என்ற வகையில் தமது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி இந்த தேரர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

நல்லிணக்கத்திற்கு சிறுபான்மை சமூகம் இரு கரம் நீட்டி தயராகவுள்ள நிலையில் இவ்வாறு திட்டமிட்டு  முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் இனங்களிடையே மீண்டும் முறுகல் நிலையை தோற்றுவிக்கலாம் என்பதை கூறிக்கொள்ள விரும்புகி்றேன்.   நேற்று  இரவு (  15 )   சாய்ந்தமருதில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனைக் கூறினார்

கிழக்கில் சிறுபான்மையினரை திட்டமிட்ட வகையில் ஒழிப்பதற்கு இனவாதிகள் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனரா  என்ற சந்தேகத்தை இவ்வாறான தொடர் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன.  லங்கை நீதித்துறை கட்டமைப்பில் தமக்கு எதிராக அநீதிகள் இடம்பெறும் போது அதற்கு எதிராக வழக்கு தொடரும் உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் இருக்கின்றது என்பதுடன் இந்த தேரர் வழக்கு தொடர்ந்த அரச ஊழியர் ஒருவரை  அச்சுறுத்துகின்றார் என்றால் அவர் இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார் என்றே கூற வேண்டும்.

இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு ஒரு சட்டம் பெரும்பான்மையினருக்கு ஒரு சட்டம் என்பதில்லை தேரராக இருந்தாலும் ஐயராக  இருந்தாலும் பாதிரியாராக இருந்தாலும் மௌலவியாக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்,

ஆகவே நீதித்துறையின் சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளும் இந்த தேரரின் நடவடிக்கையினை கண்டிப்பதுடன் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்த தேரர் கைது  செய்யப்பட வேண்டும்.

அது மாத்திரமின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸ் அதிகாரிகள் சக அரச ஊழியர் ஒருவரை தூற்றப்படுவதை பார்த்துக் கொண்டு  அருகில் இருந்து கைகட்டி வாய்மூடி  மௌனமாக இருப்பதை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுடன் குறித்த அதிகாரிகள் மீதும்  எவ்வித தயவு தாட்சணையும் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய பொலிஸாரே சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை  பார்த்தும் பாராமுகமாக இருக்கின்றார்கள் என்றால் எமது எதிர்கால இருப்புக்கும் பாதுகாப்புக்கும் என்ன உத்தரவாதம் இருக்கின்றது

இறக்காமத்தில் அண்மையில் சிலை வைக்கப்பட்ட போது அதற்கு ஆதரவாக செயற்படும் சிறுபான்மையினரின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவான நல்லாட்சியின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தயா கமகே பதவி விலக்கப்பட வேண்டும் என்பதையும் நான் வலியுறுத்தியிருந்தேன்.

இவ்வாறான அரசியல்வாதிகளின் தவறான முன்னுதாரணங்களின்  மூலமே இவ்வாறான நடவடிக்கைகள் பகிரங்கமாக அச்சமின்றி முன்னெடுக்கப்படுகின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் .

அது மாத்திரமன்றி பௌத்த தேரர் ஒருவர் இவ்வாறு நடந்து கொள்வது பௌத்தர்கள் தொடர்பில் தவறான புரிதலை சர்வதேசத்தின் மத்தியில் ஏற்படுத்தும் என்பதையும் தௌிவாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

எனவே ஜனாதிபதியும் பிரதமரும் நல்லாட்சியை நடைமுறைப்படுத்தி அதன் பண்புகளை  பேணுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகையில் அது குறித்து சிறுபான்மையினர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இந்த தேரர் மாத்தரமன்றி இனவாதத்தைப் பேசுவோர் அனைவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகள் முளையில் கிள்ளி எறியப்படாவிட்டால் கடந்த 30 தசாப்தங்களாக நம் நாட்டில் ஏற்பட்ட  முரண்பாடுகள் மீண்டும் தோற்றம் பெற வழி வகுக்கலாம் என்பதால் நல்லாட்சி அரசு தேரர்களாக இருந்தாலும் சட்டத்தை பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.

கிழக்கில் அனைத்துக்கட்சிகளும்  அனைத்து இனத்தைச் சாரந்தவர்களும் இணைந்து ஆட்சியை முன்னெடுத்துவரும் நிலையில் அங்கு இனவாத செயற்பாடுகளுக்கு ஒரு போது இடமளிக்க முடியாது எனவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.