எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முகமது மோர்சி மீதான மரணதண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு சிறையை உடைத்து பலரை கொலை செய்தமை தொடர்பாக பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு அவருக்கு 2014ஆம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது. மோர்சி இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்த நிலையில் இதனை விசாரித்த நீதிமன்றம் அவர் மீதான மரணதண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
எகிப்தில் சுமார் 30 ஆண்டுகளாக ஆட்சியில் ஜனாதிபதியாக இருந்த ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி மக்கள் புரட்சியால் அகற்றப்பட்டதன் பின்னர் மோர்சி 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் மூலம் ஜனாதிபதியானார். எனினும் அவருக்கெதிராகவும் போராட்டம் வெடித்தமையினால் 2013ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி மூலம் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2014-ல் இடம்பெற்ற தேர்தலில் முன்னாள் ராணுவ தளபதி அப்தெல் பத்தா அல் சிசி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.