குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கூட்டு எதிர்க்கட்சியின் பத்து உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவாக செயற்பட்டு வந்த 10 கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்றைய தினம் பாராளுமன்றில் நடைபெறவுள்ள நிலையில் இந்த வாக்கெடுப்பின் போது கூட்டு எதிர்க்கட்சியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளார் எனவும் மேலும் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது அவையில் பிரசன்னமாகாமலிருக்கத் தீர்மானித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரண்டு நடவடிக்கையுமே அரசாங்கத்திற்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும் எனவும்; கூட்டு எதிர்க்கட்சியின் இந்த பத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விரைவில் இணைந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இன்று மாலை 6.00 மணியளவில் வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ஆளும்கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றில் பிரசன்னமாகியிருக்க வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது ஜே.வி.பி கட்சி எதிராக வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பெரும்பாலும் எதிராக வாக்களிக்காது எனவும், சில வேளைகளில் வாக்களிப்பில் பங்கேற்பதனை தவிர்க்கக் கூடும் எனவும் பாராளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.