ஆணைக் குழுக்களை அரசு ஏற்படுத்துகின்றபோது அவற்றில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வகையில் பிரதிநிதிகளை நியமிப்பது அவசியமாகும். அத்துடன், அரச நிறுவனங்கள், அரச திணைக்களங்கள், அரச சபைகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் நிர்வாகக் கட்டமைப்புகளிலும் மேற்படி மூவின மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற வகையில் பிரதிநிதித்துவங்கள் அவசியமாகுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், உயர் நீதிமன்றம், மத்திய மற்றும் மாகாண மேன் முறையீட்டு நீதிமன்றங்களிலும், மேல் நீதிமன்றங்களிலும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களைப் பிரதிபலிக்கின்ற வகையில் நீதிபதிகளின் நியமனங்கள் அமைய வேண்டும். அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீதிமன்ற மொழியாக தமிழ் மொழி இருப்பதாலும், வழக்குகள் மேல் நீதிமன்றங்களுக்கு மேல் விசாரணைகளுக்காக வருகின்றபோது, அவ்வழக்குகளுக்கான தஸ்தாவேடுகளும், ஆவணங்களும் தமிழ் மொழியில் இருப்பதால், தமிழ் மொழி மூலப் பரிச்சயமற்றவர்கள் மேல் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக கடமைகளில் இருக்கின்ற காரணத்தினால் வழக்கு விசாரணைகளில் நீண்டகால தாமதமேற்பட்டு, வழக்காளிகள் பல சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.
எனவே, இவ்வாறான பொது மக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளை மனதில் கொண்டு, அந்தந்த இடங்களில் காணப்படுகின்ற இன விகிதாசார அடிப்படையிலும், தேவைகளின் நிமித்தமும், தமிழ் மொழி பரிச்சயமுள்ள நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.