குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் சித்திரவதை சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரியுள்ளது. ரொரன்டோவைச் சேர்ந்த ரோய் சமாதானம் என்பவருக்கே இவ்வாறு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென கோரியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை குற்றச் செயலுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
தாம் சித்திரவதைக்கு உட்பட்டதாகக் கூறி குறித்த கனேடியர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்திருந்தார். 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதற்காக இலங்கை சென்றிருந்த போது அவரை இலங்கைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிங்கப்பூரிலிருந்து நண்பர் ஒருவர் தருவித்திருந்த 600 செல்லிடப் பேசிகளையும் அவரிடமிருந்து மீட்ட காவல்துறையினர், கனேடிய புலி என தம்மை அடையாளப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். கைது செய்யப்பட்டதன் பின்னர் கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.