குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில் காவல்துறை உத்தியோகஸ்தர் மீது மிளகாய் பொடி வீசி அவரது ஆயுதத்தை கொள்ளையடிக்க முயன்ற சந்தேகநபர்கள் தொடர்பில் காவல்துறை புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். யாழ்.துன்னாலை கெட்டி சந்தி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு குறித்த சம்பவம் இடம்பெற்று உள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது ,
துன்னாலை பகுதியில் சட்டவிரோத மண் கடத்தல்கள் இடம்பெற்று வருவதனால் அதனை கட்டுப்படுத்தும் நோக்குடன் , கெட்டி சந்திப்பகுதியில் காவல்துறையினர் காவலரண் ஒன்று அமைத்து தினமும் ஐந்து காவல்துறை காவல் கடமையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
சம்பவ தினத்தன்று நள்ளிரவு வேளை காவலரணில் ஒரு காவல்துறை உத்தியோகஸ்தர் காவல் கடமையில் ஈடுபட்டி இருந்த வேளை ஏனைய நான்கு காவல்துறையினரும் தூக்கத்தில் இருந்துள்ளனர். அவ்வேளை குறித்த காவலரணுக்கு சென்ற ஐந்து பேர் கொண்ட குழுவினர் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகஸ்தர் மீது மிளகாய் பொடியினை வீசி தாக்குதல் மேற்கொண்டு விட்டு அவரிடம் இருந்து ரி- 56 ரக துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளனர்.
அதனை அடுத்து குறித்த காவல்துறை உத்தியோகஸ்தர் அவலகுரல் எழுப்பியதை அடுத்து தூக்கத்தில் இருந்த ஏனைய நான்கு காவல் துறை உத்தியோகஸ்தர்களும் விழித்துக் கொண்டதை அடுத்து தாக்குதலாளிகள் தப்பி சென்று உள்ளனர். குறித்த சம்பவம் குறித்து காங்கேசன்துறை காவல்துறை அத்தியட்சகர் தலைமையில் விஷேட குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.