155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அண்மையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களின் குடும்பங்களுக்கு நட்ட ஈடு வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து உயிரிழந்த மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்துள்ளார். உயிரிழந்த மாணவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அமைச்சரவையில் இது குறித்து அனுமதி பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
2 comments
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் திரு. சுவாமிநாதன், யாழ். போலீஸாரினால் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்துள்ளதோடு, அவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படுமெனவும், இது குறித்து அமைச்சரவையில் அனுமதி பெற்றுக் கொள்ளப்படுமெனவும் கூறியுள்ளார்? அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை, வட- கிழக்கில் விகாரை அமைப்பதனால் எமக்கு என்ன பாதகம்? பாதகம் எவையும் இல்லையென்றால் நாங்கள் அதனை பற்றி அதிகம் கண்டு கொள்ள வேண்டிய அவசியமில்லை, என்றும் வாய்ச் சவடால் விட்டிருக்கின்றார்!
யாழ்/ பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டு ஒரு மாதம் முடிந்திருக்கும் நிலையில், இன்று வரை நஷ்டஈடு வழங்குவது தொடர்பில், அமைச்சரவை அனுமதி பெறவோ, அன்றி முடிவெடுக்கவோ இல்லையென்பது வேதனைக்குரியதே! ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நஷ்டஈடு வழங்க ஜனாதிபதியின் ஆணையொன்றே போதுமே? சரி, அதற்கு அவருக்கு இஷ்டமில்லையென்றால், இது விடயத்தில் அதிக அக்கறை செலுத்தும் அமைச்சர் திரு. சுவாமிநாதன், அமைச்சரவையில் அதற்கான கோரிக்கையை முன்வைத்து விரைவாக அனுமதி பெறாதது ஏன்? அந்த அனுமதியுடன் இவர் யாழ் சென்றிருந்தால், ‘அதுவல்லவோ மக்கள் சேவை’? கொலையுண்ட மாணவர்களின் பெற்றோர்கள் நஷ்டஈட்டை விட, ‘இது போன்றதொரு சம்பவம் இனிமேலும் நடைபெறாதிருக்க, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்’, என்பதிலேயே உறுதியாக இருக்கின்றார்களென்பது, வேறு விடயம்!
பௌத்த விகாரைகள் அமைப்பது தொடர்பில், தனது இயலாமையை மறைக்க, இவருக்கு இதை விட வேறு எதைத்தான் சொல்ல முடியும்? இன்னும் சொல்வதானால், தனக்கேயுரிய நியாயமான கருத்துக்களை முன்வைக்கும் துணிவில்லாத அமைச்சர், நக்கிப் பிழைக்கும் தந்திரத்தைப் பாதுகாக்க முயலுகின்றார்? எமது கொல்லையில் காஞ்சிரஞ்செடி முளைத்தால், ‘அது என்னை ஒன்றும் செய்யவில்லை’, என்பதற்காக, நாம் அதை வளர விடுவதில்லை? இன்று அதை நாம் அனுமதித்தால், நாளை அது கொல்லை முழுவதையுமே ஆக்கிரமிக்கும்போது, ‘குத்துது, குடையுது’, என்று புலம்புவதால் பயனில்லை? பௌத்த மதத்தினர் வாழாத இடத்தில் பௌத்த விகாரைகளின் தேவைதான் என்ன? அதுவும் தனியார் காணிகளில் விகாரைகள் அமைப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?
அமைச்சரே, புட்டிக்கும், பார்சலுக்கும் அலையும் இனமல்ல, ‘தமிழ் இனம்’! இது போன்ற அதிமேதாவித்தனமான கருத்துக்களைக் கூறித் தமிழ் மக்களை மேன்மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம்!
யாழ். நல்லூரில் சமய நிகழ்வு ஒன்றில் (21/11/2016) கலந்து கொண்டிருந்த அமைச்சர் திரு. சுவாமிநாதன், வடக்கு கிழக்கில் புதிதாக நிறுவப்படும் பௌத்த விகாரைகளை நியாயப்படுத்தும் வகையில், ‘கதிர்காமத்தில் இந்து மதம், பௌத்த மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாம் மதம் ஆகிய மதங்கள் சார்ந்த ஆலயங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இருந்தாலும், அங்கே பிரச்சினைகள் எதுவும் இல்லை’, என்றும் கூறியிருந்தார்!
அமைச்சரின் உவமானம் தொடர்பில், அவரது அறிவீனம் குறித்து என்ன சொல்ல? கதிர்காமம் குறித்துச் சொன்னவர்,
தமிழ் மக்கள் தரப்பில் எந்த வித எதிர்ப்புக்களுமின்றி/ 30 வருட போராட்ட காலத்தில் கூடத் திட்டமிட்டுச் சேதம் விளைவிக்கப்படாத, யாழில் பல பல்லாண்டுகளாக இருக்கும் நாக விகாரை குறித்தும், நயினாதீவில் பல்லாண்டுகளாக இருக்கும் நாகதீபம் விகாரை குறித்தும் அறிந்திருக்கின்றாரா? மேலும், கதிர்காமம் குறித்துக் கதைப்பவர், பம்பலப்பிட்டி கதிரேசன் கோவில் குறித்தும், பாணந்துறை மாணிக்கப் பிள்ளையார் குறித்தும், சிலாபத்தில் இருக்கும் பாடல் பெற்ற சிவத் தலமான முன்னேஸ்வரம் குறித்தும் கூடக் கூறியிருக்கலாமே?
வடக்கு கிழக்கில் தமிழர் அக்கறை கொள்வது இவை குறித்தல்ல! நாளுக்கு நாள், முழத்துக்கு முழம் புதிது புதிதாக முளைக்கும், ‘அவசர பிரசவங்களான விகாரைகள்’, குறித்தேயென்பதை உணரும் பக்குவம் அமைச்சருக்கு இல்லையா? திட்டமிட்டு, நில ஆக்கிரமிப்பு நோக்கில் நிறுவப்படும் விகாரைகள் குறித்துக் கவலை கொள்ளாமல் இருக்கவும் முடியுமா?
அண்மையில், தந்திரி மலையில் என நினைக்கின்றேன், ஒரு புத்தர் சிலையைச் சில பௌத்த துறவிகள் அவசர அவசரமாக நிறுவினார்கள்! நிறுவியவர்கள் அதற்காகக் கூறிய நியாயம், அப் பிரதேசம் புதைபொருள் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காகப் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசமாம்? அது குறித்து அக்கறை கொள்ளவும், உண்மையாகவே பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசமானால், அதைச் சட்ட ரீதியாக மேற்கொள்ளவும் ஒரு அமைச்சே இருக்கின்றதே? இது விடயத்தில், காவி உடுத்தியவர்களுக்குப் புதிதாக இந்தப் போலி அக்கறை ஏன்?