வடக்கு தெற்கு உரையாடல்- தமிழ் மக்கள் பேரவையின் பத்திரிகையாளர் மாநாடு கொழும்பு 22-11-16 (தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களுள் ஒருவரான இருதய வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி பூ. லக்ஸ்மன் அவர்களின் உரை )
தமிழ் மக்கள் பேரவையின் சார்பில், பேரவை ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் அதன் செயற்பாடுகள் மற்றும் குறிக்கோள்கள் பற்றி விளக்கமளிப்பதற்காக நாம் இங்கு கூடியிருக்கின்றோம். எந்த ஒரு ஒடுக்கப்பட்ட மக்களுக்காவும் மனிதத்தன்மையுடன் குரல் கொடுக்கும் நல் மனிதர்கள் இந்ந்நிகழ்வை இங்கு ஒழுங்கமைத்தமைக்கு தமிழ் மக்கள் பேரவை சார்பிலும் தமிழ் மக்கள் சார்பிலும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். வடக்கு தெற்கு மக்களின் திறந்த உரையாடலுக்கான ஒரு முக்கிய புள்ளியாக இது அமையவேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்கவேண்டும் எனில் நாம் அந்த பிரச்சினையின் அடிப்படையை புரிந்து கொள்ளவேண்டும். பிரச்சினை இருப்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். பிரச்சினை குறித்த தரவுகளை உண்மையுடன் உரையாட வேண்டும். அதிலிருந்தே பிரச்சினையின் தீர்வுக்கான ஆரம்ப படிகள் ஆரம்பமாகின்றன. மாறாக, பிரச்சினையின் மூலத்தையும், தன்மையையும், பிரச்சினையால் ஏற்பட்ட பாதிப்பையும், அதற்கான நீதியான தீர்வு எது என்பவற்றையெல்லாம் மறைத்து, வெறுமனே மேம்போக்கான முறையில் பிரச்சினையை அணுகுவது ஒருபோதும் பிரச்சினைக்கான சரியான தீர்வை கொண்டுவரப்போவதில்லை. இதற்கு அப்பால், தார்மீக ரீதியிலும் சரி தந்திரோபாய ரீதியிலும் சரி அது தவறானதொரு செயற்பாடாகும். அப்படியாக உண்மைகளை மறைப்பது மேலும் மேலும் பிரச்சினைக்குரிய இருபகுதியினருக்குமிடையிலான நம்பிக்கையீனத்தையே அதிகரிக்குமே தவிர ஒரு போதும் நீண்டகால அடிப்படையில் ஒரு நிரந்தரமான தீர்வை பெற்றுத்தராது. உண்மைகளை நேர்மையுடன் பேசுவோம், அந்த உண்மைகளை செவிமடுக்க மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற உறுதியான நம்பிக்கையிலேயே நாம் இன்று உங்கள் முன் வந்திருக்கின்றோம்.
தமிழ் மக்கள் பேரவையின் தோற்றம் இலங்கைத்தீவில் கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இனமுரண்பாடு கூர்மையடைந்திருப்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். யுத்தத்திற்கு பின்னரான சூழலில் இந்த இனமுரண்பாடானது, மக்கள் பங்களிப்புடனான கலந்துரையாடல்கள் இல்லாது, வடக்கிலும் சரி தெற்கிலும் சரி வெறுமனே தேர்தல் வெற்றியை குறியாகக்கொண்ட அரசியல்வாதிகளாலும், துரதிர்ஷ்டவசமாக சில ஊடகங்களாலும், பிழையான திசையில் கொண்டுசெல்லப்பட்டு வருகின்றன. சுயலாபங்களையும் தேர்தல் வெற்றிகளையும் குறியாகக்கொண்டிராது, மக்களின் நலனை கருத்திற்கொண்ட மக்கள்மயப்படுத்தப்பட்ட ஒரு தளத்தில், தூரநோக்குடன் இயங்குவதன் மூலமாகத்தான், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உண்மையான நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என நாம் திடமாக நம்பியதன் ஒரு வெளிப்பாடு தான் இந்த தமிழ் மக்கள் பேரவையின் தோற்றம். தமிழ் மக்கள் பேரவை ஓரிரவில் திடீரென தோற்றம் பெற்ற ஒரு அமைப்பு அல்ல. வருடக்கணக்கிலான, குறிப்பாக சொன்னால், ஏறத்தாழ நான்கு வருட கலந்துரையாடல்கள்,கருத்துப்பரிமாற்றங்கள், கருத்துருவாக்கங்களின் விளைவாக கடந்த வருட இறுதியில் தோற்றம் பெற்றதே தமிழ் மக்கள் பேரவை . ஆயுதமோதல்கள் 2009 இல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது, அத்தோடு தமிழர்களின் பிரச்சினை தீர்ந்து விட்டதாக, அல்லது இந்த இலங்கை தீவின் இனப்பிரச்சினை தீர்ந்து விட்டதாக அர்த்தம் கற்பிக்கப்பட்டது. உண்மையில் இலங்கைத்தீவில் ஆயுத மோதல் என்பது இனப்பிரச்சினையின் விளைவுகளில் ஒன்றே தவிர மூல பிரச்சினை அது அல்ல. போரினால் அழிந்து போன வீதிகளும் புகையிரத பாதைகளும் மீளக்கட்டமைக்கப்பட்ட போது, தமிழர்களுக்கு இனி பிரச்சினையே இல்லை என பலவாறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு அதுவே உண்மை என நம்பவைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. தமிழர்கள் மீதான யுத்தம், மிக பயங்கரமான அழிவுகளுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, எமது மக்களினதும் மக்களின் அரசியல் இருப்பினதும் எதிர்காலம் மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாக, ஒரு வெற்றிடமாக தென்பட்டது. தமிழர்களின் நீதிக்கான பயணத்தின் மிக தீர்க்கமான இந்த காலப்பகுதி, இப்படியாக ஒரு தெளிவற்ற ஒரு வெற்றிடமான நிலையில் தொடர்ந்தும் இருப்பதன் ஆபத்தை நாம் உணர்ந்து கொண்டோம்.
இவ்வெற்றிடம், தேர்தல் மைய அரசியலினால் ஒருபோதும் நிரப்பப்படமாட்டாது, அப்படி தேர்தல் மைய அரசியலினால் நிரப்பப்படவும் கூடாது எனும் நோக்கோடு , வடக்கு கிழக்கில் வாழும் சமூக, மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், துறைசார் நிபுணர்கள், சமூக, மத பெரியவர்கள் இணைந்து நடாத்திய தொடர் கலந்துரையாடல்களும், ஆயுதமோதல்களின் முடிவிற்கு பின்னரான தமிழர் அரசியற்போக்கின் நாம் பெற்ற பட்டறிவுமே இப்படியான ஒரு மக்கள் மயப்படுத்தப்பட்ட அமைப்பின் தேவையை வெளிப்படுத்திநின்றது. அதன்வழி உருவானதுதான் தமிழ் மக்கள் பேரவை. இதன் பிரகாரம், தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகள,; அபிலாசைகள், மற்றும் அவர்களுக்கான நியாயமான நீதிபெறும் வழிமுறைகளில் ஒருமித்த கருத்துடையவர்களை முதற்கட்டமாக இணைத்து கடந்த வருட இறுதியில் தமிழ் மக்கள் பேரவை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. தமிழ் மக்கள் பேரவை தயாரித்த மக்கள் பங்களிப்புடனான தீர்வு வரைபு மக்களின் அபிலாசைகளையும் மக்களின் பங்களிப்பையும் முதன்மைப்படுத்தி தமிழ் மக்கள் பேரவை தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தது. குறிப்பாக, இலங்கைத்தீவில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு யதார்த்தபூர்வமான, நடைமுறையில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, சர்வதேச தளத்தில் பல்வேறு அரசியலமைப்பு திட்டங்களை உசாத்துணையாகக் கொண்டு ஒரு தீர்வினை மக்களின் பங்களிப்புடன் வரைவது எனும் முதல் இலக்குடன் நாம் எமது பயணத்தை ஆரம்பித்திருந்தோம். நடைமுறை நிர்ப்பந்தங்களை செயற்கையாக உருவாக்கி, அதன் மூலம் மக்களிற்கு விருப்பமின்றிய பொருத்தமற்ற தீர்வுகளை சூழ்நிலை அழுத்தங்களின் பெயரால் திணிப்பது எந்தவகையிலும் நியாயமாகாது என்பதில் நாம் மிகத் தெளிவாக இருக்கின்றோம். எனவே, உள்நாட்டு மற்றும் சர்வதேச துறைசார் நிபுணர்களின் பங்களிப்புடன், இலங்கைத்தீவின் இனப்பிரச்சினைக்கு உகந்ததான ஒரு அரசியல் தீர்வு வரைபை நாம் உருவாக்கி, வடக்கு கிழக்கெங்கிலும் நடந்த மக்கள் கலந்துரையாடல்களில் அதை முன்வைத்து, அதனை மேலும் செழுமைப்படுத்தினோம். இலங்கையில் இருக்கும் எந்த ஒரு இனக்குழுமத்துக்கும் பாதிப்பில்லாத அந்த தீர்வு வரைபை, சிறிலங்கா அரசாங்கம் நியமித்திருந்த அரசியலமைப்புக்கான மக்கள் கலந்தாய்வுக்குழுவினரிடமும் சமர்ப்பித்து, புதிய அரசியலமைப்பின் உருவாக்கத்தில் ஆக்கபூர்வமான பங்களிப்பையும், எமது ஈடுபாட்டையும் வெளிப்படுத்தி நின்றோம்.
வட- கிழக்கெங்கும் நிகழ்ந்த பரந்த மக்கள் ஆலோசனைகளின் பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் இத்தீர்வுத்த திட்ட வரைபு இலங்கையின் இனமுரண்பாட்டு வரலாற்றில், முற்று முழுதும் மக்கள் பங்களிப்புடன் உருவான ஒரு அரசியல் தீர்வு திட்டவரைபு முன்வைக்கப்பட் முதன் முறையாகும். இந்த தீர்வுவரைபு மற்றும் இலங்கை அரசியலமைப்பு, நாகரீக உலகில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு முறைமைகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகளையும் நாம் வடக்கு கிழக்கெங்கும் பரவலாக நடாத்தியிருக்கின்றோம். இன்னும் நடாத்தி வருகின்றோம். எழுக தமிழ் செயற்கையாக கட்டமைக்கப்பட்ட சூழ்நிலைகளாலும் நிர்ப்பந்தகளாலும் அழுத்தங்களினாலும் தமிழ் மக்களின் அபிலாசைகளும் கோரிக்கைகளும் பிழையாக மொழிபெயர்க்கப்படுவதாலும் எமது மக்களின் நீதிக்கான பயணம் மழுங்கடிக்கப்படக்கூடும் எனும் நிலையொன்று அண்மைக்காலமாக வெளிப்பட்டிருந்தது. இவற்றை தடுப்பதற்காகவும், கேள்விக்குட்படுத்துவதற்காகவும் மக்களுக்கானதும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள அனைத்து நட்புசக்திகளுக்கானதுமான விழிப்புணர்வு செயற்பாடு ஒன்று நடத்த வேண்டிய தேவைப்பாடு எழுந்திருந்தது. வட- கிழக்கு பிரதேசங்களில் வலிந்த சிங்கள பௌத்த மயமாக்கல், தொடர்ந்த இராணுவமயமாக்கலும் அதன் விளைவுகளும், தமிழ் மக்கள் தம் மீது இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக கோருகின்ற நீதிப்பொறிமுறை, வலிந்து காணாமல் ஆக்கபோட்டுருக்கான நீதி, தமிழ் மக்கள் மீது தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்பட்டு வரும் பயங்கரவாதத் தடைச் சட்டமும் அரசியல் கைதிகளின் நிலையும், வட- கிழக்கின் வளங்கள் அத்துமீறி சூறையாடப்படுதலும் தமிழரின் பொருளாதாரம் தொடர்ந்தும் தங்கு நிலை பொருளாதாரமாக பேணப்பட்டு வருகின்றமை, தமிழர்களின் நியாயமான அபிலாசைகளை உலகிற்கு வலியுறுத்தல் ஆகிய நோக்கங்களை முன்னிலைப்படுத்தி, ஒரு மக்கள் அணிதிரள்வொன்றின் மூலம், எமது பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை, எமக்கான நீதி இன்னமும் கிடைக்கவில்லை என மனித நேயமுள்ளவர்களை நோக்கி குரல் எழுப்பும் நோக்குடன் கடந்த செப்டம்பர் மாதம் 24 ம் திகதி யாழ் நகரில் தமிழர்கள் திரண்டு ‘எழுக தமிழ்’ எனும் பேரணியை நடத்தினார்கள். அதன் போது எடுக்கப்பட்ட பிரகடனம், முதலமைச்சர் ஆற்றிய உரை என்பன, மக்களின் பிரச்சினைகளை வெளிப்படையாக முன்வைத்தே நடாத்தப்பட்டன. எனவே இனப்பிரச்சினை குறித்த சகல விடயங்களையும் பற்றி நாம் வெளிப்படையாக உரையாடத் தொடங்குவோம். உணர்ச்சிபூர்வ அரசியலை விடுத்து, அர்த்தமற்ற சந்தேகங்களை போக்கி, யதார்த்தபூர்வமான அறிவியல்
பூர்வமான பாதையில் நடப்போம் எனும் கோரிக்கையை முன்வைத்து நாம் இம்முன்னெடுப்பை தொடங்கியுள்ளோம். எனவே தான், சற்றே தாமதமான முயற்சி எனினும், நாம் ஒரு மக்கள் அமைப்பாக உங்களுடன் உரையாடலை தொடங்குகிறோம். தேவையற்ற சந்தேகங்களை போக்கி அமைதியுடனும் கௌரவத்துடனும் வாழ்வோம் எனும் கோரிக்கையுடன் உங்கள் முன் வந்து நிற்கின்றோம். இதை ஆக்கபூர்வமான ஒரு நல்லெண்ண முன்னெடுப்பாக கருதி அனைவரும் இச்செயர்பாட்டில் கைகோர்ப்பீர்கள் எனும் நம்பிக்கை எமக்கு உண்டு. ——————————————————————————————————————————- மேலதிக விளக்கங்களுக்காக முதலமைச்சரின் உரை மற்றும் எழுக தமிழ் பிரகடனம் ஆகியன இங்கே உங்களுக்கு விநியோகிக்கப்படும். அத்தோடு அவற்றை www.tpcouncil.org எனும் முகவரியிலும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.