குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பத்திரிகைகளின் முதல் பக்கங்கள் நாட்டை அழிக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டை நல்வழிப்படுத்தக்கூடிய செய்திகள் ஊடகங்களுக்கு தேவையில்லை எனவும், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்டன செய்திகளையே முக்கியமானவையாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டைய சரியான பாதையில் இட்டுச் செல்லும் பொறுப்பு ஊடகங்களுக்கு காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அவர் ஆட்சி கவிழ்ப்பு, அரசாங்கத்தை பற்றி அவதூறு பிரச்சாரம் செய்தல், அரசியல்வாதிகளை பதவியிலிருந்து நீக்குவது போன்ற காரணிகளை முன்னிலைப்படுத்தி ஊடகங்கள் செயற்பட்டு வருவதாகவும் உலகின் எந்தவொரு நாட்டிலும் இல்லாத ஊடகக் கொள்கைகளை இலங்கை ஊடகங்கள் பின்பற்றி வருவதாகவும் அவர்; குற்றம் சுமத்தியுள்ளார்.
காலையில் பத்திரிகையை எடுக்கும் பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதில் எவ்வித பயனையும் அடைய முடிவதில்லை எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி நாட்டை அழிக்கும் வகையிலேயே ஊடகங்கள் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.