குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.பல்கலைகழக விடுதியினுள் நள்ளிரவு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை சுட்டுப்படுகொலை செய்வோம் என யாழ்ப்பாண பொலிசார் அச்சுறுத்தி சென்றதாக யாழ்.பல்கலைகழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர் . இந்த சம்பவம் தொடர்பில் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் ரஜீவன் தெரிவிக்கையில் ,
யாழ்.பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவன் ஒருவனின் பிறந்தநாளை நள்ளிரவு கொண்டாட ஏற்பாடுகள் செய்திருந்தோம். அந்தவேளை தீடீரென பல்கலைகழக விடுதியினுள் ஆயுதங்களுடன் உள் நுழைந்த பொலிசார் எம்மை அச்சுறுத்தினர்.
அவ்வேளை பல்கலைகழக விடுதியினுள் எவ்வாறு அத்துமீறி ஆயுதங்களுடன் உள்நுழைவீர்கள் ? என கேட்ட சக மாணவன் ஒருவனை நோக்கி துப்பாக்கியை நீட்டி ‘ உங்களை சுட்டுக்கொன்று விட்டு போயிடுவோம் ‘ என மிரட்டி இருந்தார்கள். அத்துடன் சக மாணவன் ஒருவனின் தகவல்களையும் எம்மை மிரட்டி பெற்று சென்றனர். என கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் தெரிவித்தார்.
இதேவளை பல்கலைகழக விடுதி வாயில் காவல் கடமையில் இருந்த காவலாளிகள் ஆயுதங்களுடன் உள்நுழைந்த பொலிசாரை தடுத்து நிறுத்தினர் எனவும் , ஆயுதங்களுடன் நள்ளிரவில் விடுதியினுள்உள் நுழைய அனுமதிக்கமாட்டோம் என காவலாளிகள் பொலிசாரை தடுத்த போதும் கவலாளிகளையும் சுடுவோம் என மிரட்டியே பொலிசார் உள் நுழைந்தார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் 20ம் திகதி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவர் பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் படுகொலை செய்யப்பட்டு இருந்தனர். இந்த சம்பவம் யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.
அந்த கொந்தளிப்பு அடங்கமுதல் மீண்டும் பல்கலைகழக மாணவர்களுக்கு பொலிசார் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளமை மாணவர்கள் மத்தியில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.