190
தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட உணர்வுகள் காணப்படுகின்றன. வெளிப்படுத்தப்பட்டும் வருகின்றன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களின் சக்தி வாய்ந்த அரசியல் தலைமையாகத் திகழ்கின்றது. கூட்டமைப்பிலேயே கருத்து வேற்றுமைகளும் முரண்பட்ட தன்மைகளும் போக்குகளும்கூட காணப்படுகின்றன.
இதனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிளவின் விளிம்பில் இருப்பதான தோற்றம் காணப்படுவதை மறுப்பதற்கில்லை. அதேநேரம் இலங்கைத் தழிழரசுக் கட்சி, ஈபிஆர்எல்எவ், டெலோ, புளொட் ஆகிய நான்கு கட்சிகளை உள்ளடக்கியிருப்பதனால், கூட்டமைப்பினுள்ளே முரண்பாடுகளும், கருத்து வேறுபாடுகளும் நிலவுவது அரசியல் ரீதியாக இயல்பானது என்ற காரணமும் கூறப்படுகின்றது.
இந்த வகையில் இத்தகைய முரண்பாடுகளும், கருத்து வேறுபாடுகளும் கூட்டமைப்பைப் பிளவுபடுத்தும் அளவுக்கு வலிமையானவையல்ல. அது பல்வேறு கட்சிகளைக் கொண்ட ஒரு கூட்டு அமைப்பில் இருக்கின்ற ஜனநாயகத்தினதும், ஜனநாயக உரிமையின் அடையாளமாகும் என்று உரைப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
உள் முரண்பாடுகள் காரணமாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிளவுபட்டு விடும். அது எந்த நேரத்திலும் நடைபெறலாம் என்ற அரசியல் ரீதியான அச்ச உணர் மக்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரங்களிலும் இல்லாமல் இல்லை.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உள் முரண்பாடுகள் காரணமாகவே, கூட்டமைப்பு உடைந்துவிடுமோ, பிளவுபட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கின்றது.
ஆயினும் கூட்டமைப்பின் ஒற்றுமையைக் குலைத்துவிட வேண்டும் என கங்கணம் கட்டியவாறு வெளிச்சக்திகள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் காரணமாகவே கூட்டமைப்பின் உள்ளே இத்தகைய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டும் சில தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
எது எப்படியாயினும் கூட்டமைப்பின் உள்ளே, சீரான அரசியல் கட்டுக்கோப்பு உருவாக்கப்பட வேண்டும். அதற்கான தேவை நீண்ட காலமாகவே நிலவுகின்றது. அந்தத் தேவையைப் பூர்த்தி செய்து கொண்டு உறுதியாகவும் செயலூக்கத்துடனும் கூட்டமைப்புச் செயற்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது.
இத்தகைய ஒரு சூழலில்தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் பத்தாவது ஆண்டு நினைவையொட்டி, அவருடைய சொந்த ஊராகிய சாவகச்சேரியில் அவருடைய உருவச்சிலையை கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் வைபவரீதியாகத் திறந்து வைத்துள்ளார்.
தமிழ் அரசியல் தலைவர்களில் ரவிராஜுக்குச் சிறப்பான இடமுண்டு. துடிப்பும் செயற்திறனும் கொண்ட ரவிராஜ், தமிழர் தரப்பின் அரசியல் தலைமையைப் பலவீனப்படுத்தி செயலற்றதாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் படுகொலை செய்யப்பட்டார் என்று துணிந்து கூறமுடியும்.
பட்டப்பகலில் நடந்த அந்தப் படுகொலை
கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி காலை கொழும்பு நாரஹேன்பிட்டி மணிங் டவுணில் இருந்த தனது வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றபோது ரவிராஜ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அன்று அவர் தனது டொயோட்டா லாண்ட் குரூஸர் பிராடோ காரை அவரே ஓட்டிச் சென்றார். அவருக்கருகில் அவருடைய மெய்ப்பாதுகாவலர் அமர்ந்திருந்தார். எவிட்டிகல மாவத்த என்ற பிரதான வீதியில் வைத்து காலை 8.40 அளவில் சரமாரியாக நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவரும், அவருடைய மெய்ப்பாதுகாவலரான சார்ஜன்ட் எல்.எஸ்.லொக்குவெலவும் படுகாயமடைந்தனர்.
ரவிராஜின் உடலில் ஐந்து குண்டுகள் பாய்ந்திருந்தன. அவருடைய மெய்ப்பாதுகாவலருடைய உடலில் எட்டு குண்டுகள் துளைத்திருந்தன. இருவரும் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது மெய்ப்பாதுகாவலர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரவிராஜுக்கு அவசர சத்திர சிகிச்சை செய்யப்பட்டு வைத்தியர்கள் அவரைக் காப்பாற்றுவதற்காகப் போராடிய போதிலும், காலை 9.20 அளவில் அவரது உயிர் பிரிந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டது. எவிட்டிகல மாவத்த வாகன நெரிசல் மிகுந்த சுறுசுறுப்பான வீதி. அந்த வீதியில் பல வீதித்தடையுடன் கூடிய சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. சோதனைகளும் இடம்பெற்றிருந்தன. ரவிராஜின் கொலைச் சம்பவம் இடம்பெற்ற பிரதேசம் பல முக்கியமான அரச அலுவலகங்கள் தனியார் நிறுவனங்கள் அமைந்திருந்த பகுதியாகும்.
மக்கள் நடமாட்டம் மிகுந்திருந்த அந்தக்காலைப் பொழுதில் பலர் முன்னிலையில் என்ன நடக்கின்றது என்று பார்த்துக் கொண்டிருந்தவர்களின் மூளையில் உறைப்பதற்கிடையில் மின்னல் வேகத்தில் அந்தச் சூட்டுச் சம்பவம் நடந்து முடிந்திருந்தது.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின்னால் அமர்ந்து வந்த ஓர் ஆயுததாரி தான் எடுத்து வந்திருந்த பேக் ஒன்றைத் திறந்து அதில் இருந்த ரீ 56 ரகத் துப்பாக்கியை எடுத்து, ரவிராஜினுடைய காரை நோக்கி நேரடியாகவும் பக்கவாட்டிலும் சரமாரியாகச் சுட்டுத் தள்ளினார். ஒரு மகசின் நிறைந்த துப்பாக்கிக் குண்டுகள் அனைத்தும் காலியாகின.
தான் கொண்டு வந்த பேக்கையும் துப்பாக்கியையும் அவிடத்திலேயே போட்டுவிட்டு, அந்த ஆயுததாரி வந்ததைப் போலவே, மோட்டார் சைக்கிளின் பின்பக்கம் ஏறி ஓடித்தப்பினான்.யுத்த மோதல்கள் இடம் பெற்றுக் கொண்டிருந்த போதிலும், இந்தக் கொலைச் சம்பவம் நாட்டையே உலுக்கியிருந்தது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்தடுத்து என்ன நடக்குமோ என்று; அரசியல் வட்டாரங்களில் பேரச்சம் பரவியிருந்தது.
உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பலரும் ஒரே குரலில் இந்தக் கொலைச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்திருந்தனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்ட 17 நிமிடங்களில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கி வந்த தேசிய பாதுகாப்புக்கான மத்திய நிலையம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று முதலாவது ஆளாக செய்தி வெளியிட்டிருந்தது.
அரசாங்கத் தரப்பின் இந்த அறிவித்தல் சர்வதேச மட்டத்திலான மனித உரிமை அமைப்புக்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை மட்டுமல்லாமல் சர்வதேச ஊடகத்துறையையும் பெரும் அதிர்ச்சிக்கும் அதேநேரத்தில் வியப்புக்கும் ஆளாக்கியிருந்தது.
இனந் தெரியாதவர்களினால் ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டார் என்றே செய்திகள் இந்தக் கொலைச் சம்பவம் குறித்து விபரம் வெளியிட்டிருந்தன. அக்காலப்பகுதியில் இடம்பெற்ற எல்லா கொலைச் சம்பவங்களும் இனந்தெரியாத நபர்களினாலேயே மேற்கொள்ளப்பட்டது என்றே செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
இவ்வாறான படுகொலைச் சம்பவங்களை நடத்திய இனந்தெரியாத நபர்கள் என்ற முகமூடியின் பின்னால் யார் இருக்கின்றார்கள், இனந்தெரியாத நபர்களாக யார் செயற்படுவது என்பதை தாங்கள் நன்கு அறிந்திருந்ததாகவே மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் அமைப்புக்களும் மனக் கசப்புடன் அப்போது தெரிவித்திருந்தன.
‘ஜனநாயகத்தின் குரல் நரக்கப்பட்டது’ ‘பேச்சுரிமைக்கு எதிரான அடக்கு முறையின் அடையாளமே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் படுகொலை’ ;இது, இலங்கையில் ஜனநாயகத்தின் மீதும், நல்லாட்சியின் மீதும் நடத்தப்பட்ட பெரும் தாக்குதல்’ ‘தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதகாப்புக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மிக மோசமான அச்சுறுத்தல்’ என்று பலவாறாக உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் இருந்து ரவிராஜின் படுகொலைக்கு எதிரான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
கொலையின் பின்னணி
இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் செய்து கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் நான்கு வருடங்கள் நீடித்ததன் பின்னர் 2006 ஆம் ஆண்டு மீண்டும் மோதல்கள் வெடித்திருந்த சூழல் அது.
போர் நிறுத்தத்தையடுத்து திறக்கப்பட்டிருந்த வடபகுதிக்கான தரைவழி போக்குவரத்துக்குரிய ஏ9 நெடுஞ்சாலை மூடப்பட்டு, வன்னியிலும் யாழ்;ப்பாணத்திலும் சிக்கியிருந்த பொதுமக்களுக்கான உணவு மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தடைப்பட்டிருந்தது. த
ரைவழியான விநியோகம் பாதிக்கப்பட்டதையடுத்து, கடல்வழியாக விநியோக நடவடிக்கைகள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும், வடமேற்கே மன்னார், வடக்கே யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் இராணுவத்தின் ஷெல் வீச்சுத் தாக்குதல்கள் மிக மோசமான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் சுமார் 2 லட்சம் பேர் இடம்பெயர்ந்திருந்ததாகத் தொண்டு நிறுவனங்கள் கணக்கிட்டிருந்தன.
மட்டக்களப்பில் மாத்திரம் 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதியளவில் ஐநாவின் அகதிகளுக்கான தூதரகக் கணக்கின்படி, 55 ஆயிரத்து 126 பேர் இடம்பெயர்ந்திருந்தனர்.
இடம் பெயர்ந்திருந்த மக்கள் வாகரையிலும் கதிரவெளி பகுதிகளில் பல இடங்களில் தஞ்சம் புகுந்திருந்தார்கள். அப்போது நவம்பர் மாதம் 8 ஆம் திகதி அரச படைகள் மேற்கொண்ட கண்மூடித்தனமான ஷெல் வீச்சுக்களில் வாகரை பிரதேச பாடசாலையொன்றில் அடைக்கலம் தேடியிருந்தவர்களில் 65 பேர் வரையில் கொல்லப்பட்டதாகவும், 125 பேர் வரையில் தெண்டு நிறுவன பணியாளர்களின் தகவலை ஆதாரமாகக் கொண்டு முதல் செய்தி வெளியாகியிருந்தது.
அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை ரவிராஜ் உள்ளிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்மையாகக் கண்டித்திருந்தனர்.
அத்துடன் மறுநாள் 9 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஐநா அலுவலகத்தின் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் அவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அவர்களில் ரவிராஜ் முக்கியமானவராக இருந்தார்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஐநா செயலாளர் நாயகத்திற்கு எழுதப்பட்ட மகஜர் ஒன்று ஐநா அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. இத்தகைய தாக்குதல்களை நிறுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அந்த மகஜரில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து. தெரண தொலைக்காட்சி சேவை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜை நேரடியாக பேட்டி கண்டிருந்தது.
அதில் குறிப்பாக ஏ9 மூடப்பட்டிருப்பது தொடர்பிலும், வடபகுதி மக்களுக்கான உணவு விநியோகம் பற்றியும் வினவப்பட்டது. அத்துடன் தனிநாட்டுக்கான போராட்டம் குறித்தும் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் தீர்வு காண விரும்புவதாகவும், தமது தாயகப் பிரதேகத்தில் தங்களுடைய நிர்வாகத்தைத் தாங்களே பொறுப்பேற்று பார்த்துக் கொள்ள விரும்புவதாகவும், அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டதையடுத்தே ஆயுத மோதல்களுக்கு தமிழ் இளைஞர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்ததாகவும் ரவிராஜ் சரளமாக சிங்கள மொழியில் தெரிவித்திருந்தார்.
இந்த நேரடி தொலைக்காட்சி உரையாடல் இடம்பெற்ற மறுநாள் காலையிலேயே அவர் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை நடத்துமாறும் சர்வதேச பொலிசாரின் உதவியைப் பெற்று புலன் விசாரணைகiளை நடத்துமாறும் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஆயினும் பத்து வருடங்கள் கழிந்த பின்னர், இப்போதைய நல்லாட்சியிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலைச் சம்பவம் தொடர்பில் 6 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கொழும்பு மேல் நீதிமன்றம் சிங்கள மொழி பேசும் ஜுரர்களின் முன்னிலையில் விசாரணை நடத்துவதற்கு அனுமதியளித்திருக்கின்றது.
சிங்களவர்கள் மத்தியிலும் மதிக்கப்பட்டிருந்தார்
நாடாளுமன்ற உறுப்பினர் யாழ் மாநகர உறுப்பினராக இருந்து மேயராகி பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் காலத்தில் தேசிய அரசியலில் பிரவேசித்து, நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருந்தார்.
அதன் பின்னர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதையடுத்து, கூட்டமைப்பிலும் அவர் இறுதியாக நாடாளுமன்ற உறுப்பினராக யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவாகியிருந்த நிலையிலேயே படுகொலை செய்யப்பட்டார்.
மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்த ரவிராஜ் சிங்களத் தலைவர்கள் மத்தியிலும் சிங்கள மக்கள் மத்தியிலும் பெயர் பெற்றிருந்தார். அவருடைய தொலைக்காட்சி நேர்காணல்கள் தமிழ் மக்களின் அரசியல் செயற்பாட்டையும் அதில் உள்ள நியாயத் தன்மையையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன.
அவருடைய இறுதி தொலைக்காட்சி நேர்முகத்தில் ஐக்கிய இலங்கைக்குள் சம உரிமையுடன் தமிழ் மக்கள் வாழ விரும்புகின்றார்கள். அந்த நிலைப்பாட்டையே தானும் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
மனித உரிமைச் செயற்பாடுகளிலும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதிலும் அவர் மிகுந்த பற்றுறுதி கொண்டிருந்தார். மிதவாத சிங்களத் தலைவர்களும் சிங்கள மக்களும் அவருடைய கருத்துக்களில் தெறித்த உண்மைகளை உணரத் தலைப்பட்டிருந்தனர்.
அதன் காரணமாக அவர் மீது அவர்கள் மிகுந்த மரியாதையும், மதிப்பும் கொண்டிருந்தனர். இதற்கு ஆதாரமாகவே சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன ரவிராஜின் சிலை திறப்புவிழாவில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் (இவர் ரவிராஜ் கொல்லப்படுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர், மட்டக்களப்பில் தேவாலயம் ஒன்றில் திருப்பலி பூசையொன்றில் கலந்து கொண்டிருந்த போது அங்கு கூடியிருந்த பெருந்திரளான மக்கள் மத்தியில் வைத்து இனந்தெரியாதவர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்) போன்றவர்கள் உயிருடன் இருந்திருந்தால், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இனவாதமின்றி பல வழிகளில் செயற்பட்டிருப்பார்கள் என ரவிராஜ் கொலை செய்யப்பட்டபோது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தான் தெரிவித்தாகவும், அதற்கு அவர், எனக்குப் புரிகின்றது. ஆனால், அது இராணுவத்திற்குப் புரியவில்லையே என பதிலளித்ததாகவும், அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது உரையில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சருடைய கூற்றிலிருந்து பல விடயங்கள் உறுதி செய்யப்பட்டிருப்பதை இலகுவாக உணர்ந்து கொள்ள முடிகின்றது.
இன்றைய நிலைமை
தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைப் பிரச்சினைகளை சிங்கள மக்கள் மத்தியில் உள்ளது உள்ளபடி கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் தமிழ் அரசியல் தலைவர்களினால் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இனப்பிரச்சினைக்கு நிரந்தரமானதோர் அரசியல் தீர்வு காண்பதற்கு சிங்கள மக்களின் ஆதரவு மிகவும் முக்கியம் என்பது இந்த நாட்டின் அரசியல் யதார்த்தமாகும்.
சிங்கள மக்களுடைய கவனத்தைத் திசைதிருப்பி தமிழ் மக்களுக்கு எதிரானதோர் அரசியல் நிலைப்பாட்டை அவர்களுடைய மனங்களில் நிலைநிறுத்துவதன் மூலம், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சூழல் தந்திரோபாய ரீதியில் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றது.
தமிழ் மக்களையும் தமிழ் அரசியல்வாதிகளையும் அவர்களுடைய அரசியல் கோரிக்கைகளையும், சிங்கள மக்கள் பகைமை உணர்வுடன் நோக்குவதற்கு இதுவே முக்கிய காரணமாகும். சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு எதிராக இனவாத அடிப்படையில் அரசியல் ரீதியான கருத்தோட்டத்தை உருவாக்கி, அதனையே முதலீடாகக் கொண்டு சிங்கள அரசியல் தலைவர்கள் ஆட்சி புரிந்து வருகின்றார்கள்.
அது மட்டுமல்லாமல், தமிழ் மக்களை அடக்கியொடுக்குவதன் ஊடாகக் கிடைக்கின்ற பலன்களை பெரும்பான்மை இன மக்களின் ஏகபோக உரிமைகளாகத் திரித்துக் காட்டி, வருகின்றார்கள்.
அத்துடன் அத்தகைய நடவடிக்கைகள் நியாயமானவை என்ற மாயத்தோற்றத்தையும் சிங்கள பேரின அரசியல்வாதிகள், சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கியிருக்கின்றார்கள்.
இதன் காரணமாகவே பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர், மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமனரத்ன தேரர் போன்றவர்களின் பகிரங்கமான, பச்சை இனவாத பேச்சுக்களையும் செயற்பாடுகளையும் வரவேற்கின்ற போக்கு சிங்கள மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
தமிழ் மக்களின் அசியல் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற சிந்தனைப் போக்கை காலத்துக்குக் காலம் வெளிப்படுத்துகின்ற சந்திரிகா பண்டாரநாயக்கா, மைத்திரிபால சிறிசேன போன்ற சிங்களத் தலைவர்கள், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு, இந்தப் போக்கு பெரும் தடையாக இருக்கின்றது என கருதுவதற்கும் இடமுண்டு.
எனவே, இனப்பிரச்சினைக்கு நிரந்தரமானதோர் அரசியல் தீர்வு ஏற்பட வேண்டுமானால் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் மற்றும் அவர்களுடைய அரசியல் உரிமைகள் தொடர்பான உண்மை நிலைமை எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
அதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் துணிவோடும், உறுதியாகவும் செயற்பட்டிருந்தார். அவரைப் போன்ற தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலும் இப்போது தேவைப்படுகின்றார்கள்.
இந்த வகையில், இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீரவு காண்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள தமிழ் மக்கள் பேரவை முதற் தடவையாக கொழும்பில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தியிருப்பது வரவேற்புக்குரிய நடவடிக்கையாகும்.
யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட எழுக தமிழ்ப் பேரணியின் இலக்கையும் நோக்கத்தையும் இனவாதமாசத் திரித்து சித்தரித்து, தென்னிலங்கையின் அரசியல் கடும்போக்காளர்களும் மத கடும்போக்காளர்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததன் காரணமாகவே தமிழ் மக்கள் பேரவை கொழும்பில் செய்தியாளர்களுடனான சந்திப்பை நடத்த முன்வந்திருந்தது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மாற்றுத் தலைமையாகத் தோற்றம் பெற்றதாக உருவகிக்கப்பட்டு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்ட, தமிழ் மக்கள் பேரவையானது, தேர்தல் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என தெளிவாகக் கூறியிருந்தது. ஆயியுனும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
அதேவேளை, தமிழ் மக்கள் பேரவையானது, தமிழர் தரப்பிலானதோர் அழுத்தக் குழுவாகவே தனது செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கின்றது என்பதை ஏனோ அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றார்கள்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அரசுக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் அழுத்தம் கொடுப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த போதிலும், தமிழ் மக்களின் அரசியல் உரிமை நிலைப்பாட்டை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வது குறித்து, தமிழ் மக்கள் பேரவை சிந்தித்திருந்ததாகக் கூற முடியவில்லை.
எழுக தமிழ் தென்னிலங்கையில் ஏற்படுத்தியிருந்த விரோதமும் குரோதமும் மிக்க இனவாத அரசியல் கடும் போக்கு காரணமாகவே, எழுக தமிழின் உண்மையான நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதற்காக முதன் முறையாக தமிழ் மக்கள் பேரவை, கொழும்பில் தனது முதலாவது செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருக்கின்றது.
இந்த நடவடிக்கையானது, சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எடுத்துக்கூறி, அதில் உள்ள நியாயப்பாட்டை அவர்கள் உணரச் செயற்வதற்கான நடவடிக்கையாக வளர்ச்சி பெற வேண்டும்.
அத்துடன், தமிழ் மக்களின் நியாயமான அரசியல் போராட்டத்திற்கு சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுத் தருவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கத் தக்க உறுதியான துணிச்சல் மிக்க தலைமைகளை உருவாக்குவதற்கு, தமிழர் தரப்பு முன்வரவேண்டும். அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
\
இதுவே அமரர் ரவிராஜ் போன்று தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தம்மையே உரமாக்கிக் கொண்டவர்களுக்கு அளிக்கின்ற உயர்ந்த கௌரவமாகும்.
Spread the love