குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முகநூலில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண பொலிசாரினால் கைது செய்யப்பட்டு குற்ற புலனாய்வு துறையினரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டு உள்ளார். வவுனியாவை சேர்ந்த என். என். ஜாக்சன் எனும் நபரே பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். குறித்த நபர் புதன்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றுக்கு பிறிதொரு வழக்கு தொடர்பான விசாரணைக்கு வந்த போது நீதிமன்றுக்கு வெளியில் பொலிசாரினால் கைது செய்யபப்ட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது
கடந்த மாதம் யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவர் பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்து இருந்தனர். அது தொடர்பில் தனது முகநூலில் பதிவிட்ட போது , யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனையும் கடுமையாக சாடி பதிவிட்டு இருந்தார். அது குறித்த முகநூல் கருத்து தொடர்பிலையே குறித்த நபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
குறித்த நபர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் கண்டுபிடித்த பொருள் ஒன்றினை 200 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாக ஊடகங்களுக்கு அறிவித்து இருந்தார். அது தொடர்பான செய்திகள் வெளியாகியதை அடுத்து குறித்த நபர் தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.