குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இனவாதத்தையும் , மதவாதத்தையும் , தூண்டி இன நல்லிணக்கத்தையும் ஐக்கியத்தையும் சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக ஜனாதிபதி , பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப் பட்டு உள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் நடைபெற்றது அதன் போது குறித்த பிரேரணையை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் முன் மொழிந்தார்.
குறித்த பிரேரணையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது ,
அண்மைக்காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கும் செயல்பாடுகள் அதிகரித்து காணப்படுகின்றது. இந்த நடவடிக்கைகளை சில தீவிர மதவாத மற்றும் இனவாத பௌத்த பிக்குகளே முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு , மட்டக்களப்பு மாவட்ட மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்னதேரர் , கிராம சேவையாளர் ஒருவரை மிரட்டி , உயிர் அச்சுறுத்தல் விடுத்ததுடன் , தமிழ் மக்களுக்கு எதிரான அசிங்கமான வார்த்தை பிரயோகத்தையும் மேற்கொண்டு இருந்தார். இவற்றினை பொலிசார் பார்த்துக்கொண்டு இருந்தனர். தேரருக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனை இந்த சபை வன்மையாக கண்டிக்கின்றது. என தெரிவித்தார்.
இனத்தை கேவலமாக பேசும் போது பொலிசார் வேடிக்கை.
அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன், ஒரு மத துறவி அசிங்கமாக பேசிய போதும் பொலிசார் நடவடிக்கை எடுக்க வில்லை. இதே செயற்பாட்டை இந்து மதகுருவோ , கிருஸ்தவ பாதிரியாரோ , அல்லது முஸ்லீம் மௌலவியோ செய்து இருந்தால் பொலிசாரின் நடவடிக்கை வேறு விதமாக அமைத்து இருக்கும்.
ஒரு இனத்தையே கேவலமாக பேசி உள்ளார் அவர் மீது நடவடிக்கை எடுக்க பொலிசார் முன் வரவில்லை. வேடிக்கை மாத்திரமே பார்த்தனர் என தெரிவித்தார்.
சட்டவிரோத கட்டடங்கள் அகற்றப்பட வேண்டும்.
அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர் கே.சயந்தன் , சட்ட அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்களை அகற்றும் அதிகாரம் உள்ளூராட்சி அமைச்சுக்கு உண்டு அந்த வகையில் அந்த அதிகாரம் மாகாண சபையிடமும் உண்டு. அதனை நாம் செய்யலாம் அதற்கு எல்லாம் பிரேரணை நிறைவேற்ற வேண்டிய தேவை இல்லை.
சட்ட அனுமதி பெறாமல் கட்டபப்டும் விகாரைகள் மாத்திரம் அல்ல ஆலயங்கள் , தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல் என்பவை கூட அகற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.
வார இறுதி நாட்களில் தான் சட்டவிரோத கட்டடங்கள் கட்டப்படுகின்றன.
அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் , சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் இதுவரை உள்ளூராட்சி திணைக்களங்களால் எத்தனை வழக்குகள் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன ?
சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து சட்ட ரீதியாக அவற்றை அகற்ற வேண்டும். வடக்கில் சட்டவிரோத கட்டடங்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை இரவு கட்டி முடிக்கப்பட்டு விடுகின்றன. அந்த தினங்களில் விடுமுறை என்பதனால் சட்டவிரோத கட்டடம் தொடர்பில் அதிகாரிகளின் கவனம் இல்லாத நேரத்தில் அவ்வாறு கட்டி முடிக்கப் படுகின்றது.
அவ்வாறு கட்டி முடிக்கப்பட்ட கட்டடம் தொடர்பில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் அதன் பின்னர் எடுக்க மாட்டார்கள் அதனால் தான் சட்ட விரோத கட்டடங்கள் அதிகமாக வார இறுதி நாட்களில் கட்டப்படுகின்றது என தெரிவித்தார்.