குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் தொடர்பிலான இறுதி முடிவு அடுத்த மாகாண சபை அமர்வில் அறிவிப்பேன் என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்து உள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு வியாழக்கிழமை நடைபெற்ற போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். எது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
வடமாகாண எதிர்க்கட்சி தலைவரான சி. தவராசாவை மாற்றம் செய்யுமாறு கோரி வடமாகாண ஆளூநரால் எனக்கு கடந்த 12ம் திகதியிடப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. குறித்த கடிதம் முறைப்படியான கடிதமாக இல்லாததால் அதனை குறிப்பிட்டு , 15ம் திகதி ஆளுநருக்கு மீள அனுப்பி இருந்தேன்.
அதன் பின்னர் ஆளுநரிடம் இருந்து முறைப்படியான கடிதம் 21ம் திகதியிடப்பட்டு 23ம் திகதி மாலை என் கையில் கிடைத்தது. அது தொடர்பில் இன்றைய தினம் இறுதி முடிவு எடுக்க முடியாது இருப்பதனால் எதிர்க்கட்சி தலைவர் மாற்றம் தொடர்பில் அடுத்த சபை அமர்வில் இறுதி முடிவை அறிவிப்பேன் என தெரிவித்தார்.
வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த சின்னத்துரை தவராசா பதவி வகித்து வந்தார். அவரை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கி எதிர்க்கட்சி தலைவராக தமது கட்சியை சேர்ந்த மற்றுமொரு உறுப்பினரான வைத்தியநாதன் தவனாதனுக்கு வழங்க வேண்டும் என அக் கட்சியின் செயலாளரும் , பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்து இருந்தார்.
குறித்த கடிதம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளரால் வடமாகாண ஆளூநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வடமாகாண சபை தேர்தலின் போது ஈழம்மக்கள் ஜனநாயக கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்தே போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.