Home இலங்கை மாவீரர்களுக்காய் ஒளிர்ந்த நிலம் – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்-

மாவீரர்களுக்காய் ஒளிர்ந்த நிலம் – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்-

by admin


மாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? என்று இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில் அளித்த ராஜித எத்தனை பேர் விளக்கேற்ற வருகிறார்கள் என்று பார்க்கதானே போகிறோம் என்று நக்கலாகப் பதில் அளித்தார். அதற்குத்தான் நவம்பர் 27 அன்று அலையாக திரண்டு பதில் அளித்துள்ளனர் தமிழ் மக்கள். இதற்கான முதல் எழுச்சியை ஏற்படுத்தியது கிளிநொச்சி துயிலும் இல்லம். இந்த நிலையில் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு, அங்கு மாவீரர்களுக்கு விளக்கேற்றத் தீர்மானித்து மாவீரர் குடும்பங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

போரில் சிதைக்கப்பட்ட துயிலும் இல்லம்

நானும் ஒரு மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவன் என்ற வகையில் 25ஆம் திகதி காலை ஏழு மணிக்கு கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் சென்றேன். ஒரு காலத்தில் அமைதியுடன் செழித்த ஒரு பூந்தோட்டம் போலக் காட்சி அளித்த மாவீரர் துயிலும் இல்லத்தை 2009இல் கிளிநொச்சியை கைப்பற்றியபோது இலங்கை படைகள் புல்டோசர் கொண்டு அழித்து தரைமட்டமாக அழித்தது. ஈழத் தமிழ் மக்களால் இருதயக் கோவிலாக வணங்கப்பட்ட துயிலும் இல்லங்களை சிங்களப் படைகள் கொடூரமாகச் சிதைத்தன. தமிழ் இனத்தின் உரிமைக்காகவும் அவர்களின் நிலத்திற்காகவும் போராடியவர்களை உறங்க இடமற்றவர்களாக அழித்து அவர்களை நினைவுகூரும் உரிமையையும் அழித்து தமிழ் நினைவழிப்பை மேற்கொண்டது இலங்கை அரசு.

2009இல் ஈழப் போர் முடிவுற்றதன் பின்னர் ஏழு ஆண்டுகளாக மாவீரர் தினங்களை மறைவிடங்களிலேயே மக்கள் கொண்டாடி வந்தனர். போரின் பின்னர் இந்த வருடம் எட்டாவது மாவீரர் தினம். கடந்த மாவீரர் தினங்களின்போது இலங்கை அரச படைகள் வடகிழக்கை சுற்றி வளைத்து, ஒரு விளக்கை ஏற்றக் கூட அனுமதி மறுத்தது. ஆலயங்களில் விளக்கேற்றவும் மணி எழுப்பவும்கூட அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இதையெல்லாம் கடந்து ஈழத் மக்கள் மாவீரர்களுக்கு தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றினார்கள். யாழ் பல்கலைக்கழகத்தில் தொடந்து ஒவ்வொரு ஆண்டும் மாவீரர்களுக்காய் விளக்காய் எரிந்தது. எங்கள் விடுதலைக்காக போரிட்டு மாண்டவர்களை நினைவுகூறும் எங்கள் தாகம் என்பது எங்கள் விடுதலைக்கான தாகம்.

ஆட்சி மாற்றத்தின் பின்னரான மாவீரர் நாள்

2015இல் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2015 மாவீரர் தினத்தின்போது விடுதலைப் புலிகளை நினைவுகூரத் தடை என்று அறிவித்த இலங்கை அரசாங்கம் அவர்களின் பெற்றார்கள் வீட்டில் அஞ்சலி செலுத்தலாம் என்றும் அறிவித்தது. இந்த ஆண்டு மாவீரர் நாள் நெருங்கும் தருவாயில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்தை நினைவுகூர அனுமதியில்லை என்று அறிவித்தார். எனினும் மாவீரர்களுக்காய் விளக்குகள் ஏற்றப்பட்டன. மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு மக்களால் செல்ல இயலவில்லை. தங்கள் பிள்ளைகளை நினைந்து கண்ணீர்விட இயலவில்லை. இவை தமிழர் நெஞ்சுக்குள் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருந்தது.

கடந்த சில நாட்களின் முன்னர் கிளிநொச்சி மற்றும் முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தை விட்டு இராணுவம் வெளியேறியிருந்தது. நவம்பர் 25 ஆம் திகதி காலை மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த பத்துப் பேர் மாவீரர் துயிலும் இல்லத்தின் வாசலில் நுழைந்தோம். சில நிமிடங்களிலேயே பத்து இருபதாகி ஐம்பதாகி நூற்றுக்கணக்கானவர்களாக மக்கள் வரத் தொடங்கினார்கள். அந்த வழியில் பேருந்தில் சென்றவர்கள் பேருந்தை விட்டிறங்கி வந்தார்கள். செய்தியை அறிந்தவர்கள் பலரும் துயிலும் இல்லம் நோக்கி விரைந்தார்கள். எருக்கலை மரங்களும் உண்ணியுமாய் அடர்ந்த காட்டை சுத்தப்படுத்தி எங்கள் முகவரியை தேடிச் சென்றவர்களின் கல்லறைகளை தேடினோம். ஒரு சில கல்லறைகள் அடையாளம் காணும் நிலையில் இருந்தன. மற்றைய அனைத்துக் கல்லறைகளைளும் இலங்கை அரச படைகளால் சிதைக்கப்பட்டன.

அலை அலையாக வந்த மக்கள்

ஆங்காங்கே சில கல்லறைகள் எஞ்சியிருந்தன. பெயர் விபரங்கள் அடங்கிய கல்லறைகளின் பகுதித் துண்டுகள் சிலவும் மீட்கப்பட்டன. அடர்ந்த காடுகளை அழிக்க மூன்று நாட்கள் ஆகியது. சிதைந்த கல்லறைத் துண்டுகள் யாவும் பத்திரமாக மீட்கப்பட்டு சேகரிக்கப்பட்டன. அவற்றை உரிய வகையில் பாதுகாப்பதற்கவும் மக்கள் தீர்மானித்தார்கள். அப் பெரும் துயிலும் இல்லத்தை, சுமார் மூவாயிரம் கல்லறைகளை, பொதுச் சுடர் ஏற்றும் மேடையை, கல்லறைகளுக்குச் செல்லும் வழியை எல்லாவவற்றையும் மண்ணோடு மண்ணாக இலங்கை அரச படைகள் ஆக்கிரமித்தன. அத்துடன் அழிக்கப்பட்ட துயிலும் இல்லத்தின்மீது முகாமிட்டு தங்கியிருந்தனர்.

அத்துடன் மாவீரர் துயிலும் இல்லத்தை அலங்கரிக்கவும் விளக்கேற்றுவதற்கான சில பொருட்கள் கிளிநொச்சியில் உள்ள வர்த்தக நிலையங்களில் சேகரிக்கப்பட்டன. வர்த்தக நிலையங்களுக்குச் சென்று மாவீரர் தின நிகழ்வுக்காக இயன்ற பங்களிப்பு கோரப்பட்டபோது எந்த பங்களிப்பு வேண்டுமானாலும் கேளுங்கள் என்று மனமுவந்து பங்களித்தனர் வர்த்தகர்கள். பல நூற்றுக் கணக்கானவர்களின் பங்களிப்புடன் துயிலும் இல்லம் தன் பழைய முகத்தை மெல்ல மெல்ல உருவேற்றியது. மாவீரர்களுக்கான சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்க நவம்பர் 27ஆம் திகதி துயிலும் இல்லம் வீரர்களுக்கு விளக்கேற்றத் தயாரானது. மக்கள் அலை அலையாக மக்கள் வரத் தொடங்கினார்கள். ஆயிரம் பேர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல ஆயிரம் மக்கள் கிளிநொச்சி துயிலும் இல்லத்தில் நிறைந்தனர்.

ஒளிபெற்ற துயில் நிலம்:

மாவீரர்கள் துயிலும் இல்லம். நெகிழ்ச்சியான நிலம். அக் கல்லறைகள் நெஞ்சை உருக்குபவை. சனங்கள் கண்ணீருடன் வந்தனர். எல்லோருடைய முகங்களும் வீரர்களின் ஒளிமுகங்களைத் தேடின. மாவீரர்கள் குறித்த பாடல்கள் ஒலிக்க அந்த வீரர்களின் நினைவில் உருகியது துயிலும் இல்லம். போரில் மாண்டுபோன தம் உறவுகளுக்கு பல்லாயிரம் மக்கள் விளக்கேற்ற, பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. துயிலும் இல்லம் வீரர்களுக்கான வெளிச்சத்தால் ஒளிர்ந்தது. எங்கள் தேசம் எங்கும், வீடுகள் தோறும் மாவீரர்களுக்கு விளக்கெரிந்தது. முழங்காவில், உடுத்துறை, வவுனிக்குளம், ஆண்டான்குளம் முதலிய துயிலும் இல்லங்களிலும் மாண்ட வீரர்களுக்கான விளக்குள் ஏற்றப்பட்டன.

உணர்வுபூர்வமாக திரண்ட இணைஞர்களை ஒருங்கிணைத்து புனரமைப்புப் பணியை வேழமாலிகிதன் முன்னெடுத்தார். பத்துப்பேருடன் தொடங்கிய இந்த முயற்சி பல ஆயிரம் பேரை திரள செய்தது மாத்திரமின்றி பல துயிலும் இல்லங்களில் மக்கள் நுழைந்து விளக்கேற்ற வைத்தது. மக்கள் தன்னிச்சையாகவே பங்களித்தனர். கல்லறைகளை தேடி அழுத தாய்மார்கள் பலர். முற்றுமுழுதாக அழிந்த மண்ணிலும் தம் பிள்ளைகள் விதைக்கப்பட்ட இடங்களைக் கண்டுபிடித்து அங்கு விளக்கேற்றினர். அப் பெரு நிலத்தில் வீரர்கள் புதைக்கப்பட்ட இடங்களில் தீபங்கள் பரவி எரிந்தன. உழவு இயந்திரத்துடன் வந்து துயிலும் இல்லத்தை துப்புரவு செய்த ஒரு சகோதரன் தன் தங்கையின் கல்லறையை கண்டு பிடித்தார். இரு நாட்களாக காடுகள் அழிக்கப்பட்ட பின்னர் மண் மூடியிருந் தன் தங்கையின் கல்லறையை கண்டு பிடித்து நெகழ்ந்த அந்தக் கணத்தை எளிதில் விபரிக்க இயலாது.
தவிப்பை தடை செய்ய முடியாது

துயில் நிலத்தின் கீழ் என் உறவு எங்கே புதைக்கப்பட்டிருக்கிறார் என்று அலைந்த அந்த தவிப்பை இலங்கை அரசால் எப்படி தடை செய்ய முடியும்? தடைசெய்யப்பட்ட இயக்கத்தை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்று இலங்கை அரசு தெரிவித்திருந்தது. அன்று திரண்டு வந்த மக்களின் உணர்வை அரசால் தடை செய்ய இயலுமா? அவர்கள் தமிழ் மக்களின் பிள்ளைகள். அவர்களை வரலாறு முழுதும் தமிழர்கள் தொழ விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்கள் தமிழ் மக்களின் உரிமைக்காக, விடிவுக்காக, விடுதலைக்காக தமது உயிரை தியாகம் செய்தவர்கள். இந்த மண்ணில் எங்கள் மக்கள் இன்னும் இருக்கிறார்கள் என்றார்கள், எங்கள் தாயகம் இப்போதும் எஞ்சியிருக்கிறது என்றால் அது அவர்களால்தான். துயிலும் இல்லங்கள், இன ஒடுக்குமுறையின், அதற்கு எதிரான எழுச்சியின் சரித்திரத் தடங்கள். மாவீரர்கள், ஈழத் தமிழ் இனத்தின் பெருமுகமாய், விடுதலையின் பெருங்குரலாய் விதைகுழியிலிருந்தும் இன்றும் போராடும் தொன்மங்கள்.

எங்கள் வீரர்கள் எம் தாயக நிலம் மீட்கச் சென்றனர். நாம் அவர்களின் விதை நிலம் மீட்கச் சென்றோம். இனி வரும் நாட்களில் மாவீரர் துயிலும் இல்லங்களிலும் சிங்கள சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இனி எங்கள் மாவீரர்களின் கல்லறையுடன் அவர்கள் பேசட்டும். எங்கள் மாவீரர்களின் கல்லறையும் அவர்களுடன் பேசும். நாங்கள் சந்தித்த இன ஓடுக்குமுறைகள் குறித்தும், எங்கள் தாகம் குறித்தும் கல்லறைகள் பேசும். எங்கள் முகங்களின் காயங்களை அவர்கள் பார்க்கட்டும். எங்கள் கல்லறைகளுடன் புரிந்த மனித நாகரிகத்திற்கு விரோதமான போரை அவர்கள் பார்க்கப்பட்டும். தாய் நிலத்திற்காக போராடி மாண்டுபோனவர்களுக்கு உறங்க நிலம் மறுக்கப்பட்ட பண்பாடற்ற செயலை சிங்களவர்கள் இனி உணரட்டும்.

மாவீரர்களை நினைவுகூர்வதைக் கூட தடுத்த இலங்கை அரசு இம்முறை நினைவுகூரவே உத்தியோகபூர்வமற்ற முறையில் அனுமதி அளித்திருக்கிறது. மாவீரர்களை நினைவுகூறும் தமிழ் மக்களின் உரிமையை அங்கீகரிப்பதும் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதும்தான் தமிழ் மக்களை இலங்கை அரசாங்கம் புரிந்து கொள்ளும் வழி. அதனை மறுக்கிற வரை இலங்கை அரசை உரிமை மறுப்பு அரசாக, ஆக்கிரமிப்பு அரசாகவே ஈழ மக்கள் கருதுவார்கள். இந்த நாட்டில் மிக நீண்ட காலமாக புரையோடிப் போயிருக்கும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாக இருந்தால் இந்த இனப்பிரச்சினையால் – இந்த இன ஒடுக்குமுறையால் போராடி மாண்டவர்களை, அவர்களின் தாகத்தை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More