குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் எதனையும் செய்ய முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் ஏதேனும் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தால் அது குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு இராணுவத்தைச் சாராது எனவும் அது சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு அமைச்சு மற்றும் காவல்துறை திணைக்களத்தைச் சாரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இராணுவ முகாம் ஒன்றிற்கு உள்ளே மாவீரர் தின நிகழ்வுகள் நடத்தப்படவில்லை எனவும், முகாம் ஒன்றுக்கு அருகாமையில் உள்ள வீதியொன்றில் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அது எமக்கு பொறுப்புடையதல்ல எனவும், மாவீரர் தினம் தொடர்பில் நாம் எதுவும் செய்வதற்கில்லை என அவர் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தால் அது குறித்து சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சும் காவல்துறை திணைக்களமுமே நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.