கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான சுவிஸர்லாந்து தூதரகத்தின் அரசியல் கொள்கைகள் வகுப்பு தொடர்பான செயலாளர் டமியனோ அஞ்சலோ ஸ்குஅய்டாமெட்டி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று திருகோணமலையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
நிதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்படும் சில நிர்மாண செயற்பாடுகளில் மத்தியரசின் தலையீடுகள் தொடர்பிலும் இதன் போது விளக்கமளிக்கப்பட்டுள்ளன எனவும் சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் செயற்பாட்டில் சுவிஸர்லாந்தின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக கிழக்கு மாகாணசபையின் ஊடகக்குறிப்பில் தெரிவிக்க்பபட்டுள்ளது.
அத்துடன் பாரிய கைத்தொழில் முதலீடுகளை கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு வருவது தொடர்பில் சுவிஸர்லாந்து தூதரகத்தின் அரசியல் கொள்கை வகுப்பு தொடர்பான செயலாளர் டமியானோ அஞ்சலோ தெரிவித்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்திப்பின் ஊடகங்களுக்கு பதிலளித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் நாட்டில் தற்போது திடீரென தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளி்ன் பின்னால் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் ஒன்று உள்ளதாகவும் தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தினூடாக மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதற்கான சாதகமான காரணிகள் உருவாகியுள்ளன எனவும் தெரிவித்தார்.
மேலும் மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கான உபகுழு அறிக்ைக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அதற்கு எதிராக பெரும்பான்மை மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்தவும் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தை உருவாக்கும் போது சில வேளை பொதுசன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் அவ்வாறு ஏற்பட்டால் பெரும்பான்மையினரின் வாக்கே அதனை தீர்மானிக்க கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
பெரும்பான்மையினர் இந்த நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காமல் தௌிவாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன் எனவும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.