குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் மெய்யான சமாதானம் இன்னமும் ஸ்தாபிக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதிகள், படைவீரர்கள் அர்ப்பணிப்புடன் பௌதீக ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும் மெய்யான சமாதானம் கட்டியெழுப்பப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றதாகவும், இது நாட்டுக்கு பாரிய இழப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டை பிளவடையச் செய்யும் எண்ணக்கரு என்று நாட்டை விட்டு முழுமையாக இல்லாதொழிக்கப்படுகின்றதோ அப்போதே யுத்தம் வெற்றியீட்டப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் சாசனம் நாட்டை பிளவடையச் செய்யும் வகையில் அமைந்துள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள், பௌத்த பிக்குகள் மற்றும் வெளிநாட்டில் வாழ்ந்து வருவோரிடம் பிரச்சாரம் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
வழங்கப்படும் தீர்வு அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அமைய வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியில் இருந்த காலத்தில் தேசியப் பிரச்சினை தொடர்பில் ஒரு விதமாகவும், ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போது வேறு விதமாகவும் நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை மேசைக்கு வருமாறு மஹிந்தவிற்கு அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்துள்ள அவர் வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உள்ள சிறந்த தலைவர் இரா.சம்பந்தன் ஆவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.