குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
‘நாடா’ புயல்காற்று எனக் கூறப்படும் புயல் காற்று ஒன்று இன்று வடக்கை அச்சுறுத்திக் கொண்டுள்ள நிலையில் இன்று காலை கிளிநொச்சியில் பலமாக வீசிய காற்றினால் காலை எட்டு முப்பது மணியளவில் கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் உள்ள தற்காலிக வகுப்பறை தொகுதி ஒன்று முற்றாக பாறி வீழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் நடந்தவேளை பாடசாலையில் மாணவர்கள் இருந்த போதிலும் எவருக்கும் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரம் ஆறுதொடக்கம் உயர்தரம் கலை வர்த்தகம் கணிதம் விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளைக் கொண்டு இயங்கி வருகின்ற இப்பாடசாலையில் கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பிரதேச மாணவர்களை அதிகமாகக் கல்விகற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
குறித்த பாடசாலை ஒரு 1ஏபி பாடசாலையாக இருக்கின்ற போதும் போதியளவு வகுப்பறை வசதிகள் இன்றி நீண்ட காலமாக செயற்பட்டு வருகிறது. இது தொடா்பில் பாடசாலை சமூகமும் பெற்றோர்களும் உரிய தரப்பினா்களிடம்கொண்டு சென்றும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பெற்றோா்கள் கவலை தொிவித்துள்ளனா்.
இவ்வாறு தற்காலிகமாக இயங்கி வந்த வகுப்பறை கொட்டகை ஒன்றே அனா்த்தத்திற்கு உள்ளாகியுள்ளது .