குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமை குறித்து மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.
அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி பாரியளவில் அதிகரித்துள்ளமை குறித்து கேள்வி எழுப்பபட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானங்களை மத்திய வங்கி அதிகாரிகள் உரிய முறையில் அமுல்படுத்தத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள பிரதமர் மத்திய வங்கியின் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்வதனை உறுதி செய்து கொள்ளுமாறு மத்திய வங்கி ஆளுனருக்கு பணித்துள்ளார்.
மத்திய வங்கியின் சில அதிகாரிகள் கடந்த அரசாங்கத்துடன் தொடர்பு பேணி வருவதாகவும் இவர்கள் புதிய அரசாங்கத்தின் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு விருப்பமின்றி சில கொள்கைகளை காலம் தாமதித்து அமுல்படுத்தி வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.