மியான்மாரில் ரோஹிங்யா இன முஸ்லிம்கள் கொல்லப்படுவதனைக் கண்டித்து மலேசியாவின் கோலாலம்பூரில் இன்று கண்டனப் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. ரோஹிங்யா இன மக்கள்மீது மனித உரிமைகளை மீறியவகையில் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருவதாகவும், இந்த கொடூரத்தை வெளியுலகுக்கு மறைப்பதற்காக ஊடகவியலாளர்களை அரசாங்கம் தடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டனப் பேரணியில் மலேசியா பிரதமர் நஜிப் ரசாக்கும் கலந்துகொண்டுள்ளார். அப்போது அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசிய நஜிப் ரசாக், ஆசியான் நாடுகளின் சட்டதிட்டங்களை மியான்மர் அரசு பின்பற்ற வேண்டும் எனவும் ரோஹிங்யா மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் மியான்மரில் நடைபெற்றுவரும் இன அழைப்பை எதிர்க்கும் தமது போராட்டத்துக்கு இந்தோனேசிய ஜனாதிபதி துணைநிற்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இன்றைய கண்டன பேரணியில் பான் மலேசிய இஸ்லாமிய கட்சியின் தலைவர் அப்துல் ஹாதி அவாங் மற்றும் பல இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள், தொண்டர்கள் என அதிகமானோர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.