முதல்வர் ஜெயலலிதாவின் இதயத்தை செயற்கையாக தூண்டுவித்து செயல்பட முயற்சிகள் நடப்பதாக அப்பல்லோ மருத்துவமனை அறிவிப்பு:-
முதல்வர் ஜெயலலிதாவின் இதயத்தை செயற்கையாக தூண்டுவித்து செயல்பட முயற்சிகள் நடப்பதாகவும் குறிப்பாக extracorporeal membrane heart assist device மூலமாக சிகிச்சை தொடர்வதாக அப்பல்லோ தெரிவித்துள்ளது. அதாவது இதயமும், நுரையீரலும் செயல்பட முடியாத நிலைக்குப் போகும்போது செயற்கையாக தூண்டுவித்து செயல்பட வைக்கும் முயற்சியே இது. கிட்டத்தட்ட பேஸ்மேக்கர் போல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து காவலர்களும் காலை 7 மணிக்கு பணியில் இருக்க வேண்டும்.. பொலீஸ் டிஜிபி உத்தரவு
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் சிபிசிஐடி, குற்றப்பிரிவு பொலீஸ், மாவட்ட எஸ்.பி.க்கள், காவல்துறை ஆணையர்கள்உள்பட அனைவரும் காலை 7 மணிக்கு சீருடையுடன் பணியில் இருக்க வேண்டும் என தமிழக காவல்துறை தலைவர் டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ஞாயிறு மாலை முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் பரவின. இதனை அவர் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவ அறிக்கையும் உறுதி செய்தது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழலும், பதற்றமும் பரவி வருகிறது. ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைவர் மற்றும் மத்திய தொழிற்படை பாதுகாப்புத் துறை தலைவர் ஆகியோர் உடனடியாக சென்னை செல்ல இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இருவரும் தனி விமானத்தில் சென்னைக்கு இன்னும் சில மணி நேரங்களில் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மாவட்ட எஸ்.பி.க்கள், காவல்துறை ஆணையர்கள், சிபிசிஐடி, குற்றப்பிரிவு போலீஸ் உள்பட அனைவரும் தங்களின் வாகனங்களுடன் காலை 7 மணிக்கு சீருடையுடன் பணியில் இருக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைவர் டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் அவரது தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதில், காவலர்கள் அனைவரும் விடுமுறையின்றி பணிக்கு சமூகம் அளிக்க வேண்டும் என்றும் மறு உத்தரவு வரும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா எப்படி இருக்கிறார்? டெல்லி முதல் கன்னியாகுமரி வரை பதட்டம்….
டெல்லி முதல் கன்னியாகுமரி வரை முதல்வரின் நிலை என்ன, அவர் எப்படி இருக்கிறார், அவரது உடல் நிலை இப்போது எப்படி இருக்கிறது என்பதை அறிய தூங்காமல் காத்திருக்கிறது. டிவிட்டரிலும் முதல்வர் ஜெயலலிதா என்ற வார்த்தைதான் அதிகமாக பேசப்படுகிறது.
சென்னையில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். அப்பல்லோ மருத்துவமனை உள்ள கிரீம்ஸ் சாலையில் அதிமுகவினர் மயமாக காணப்படுகிறது. ஆயிரக்கணக்கில் அதிமுகவினர் குவிந்து வருவதால் அந்த இடமே தொடர்நது பதட்டமாக உள்ளது.
300க்கும் மேற்பட்ட பொலீஸார் அப்பகுதியில் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். அண்ணாசாலையிலும் எங்கு பார்த்தாலும் அதிமுகவினர் சாரை சாரையாக சென்றவண்ணம் உள்ளனர். ஏழைகளின் காவலர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்றுத் திரும்புவார் என தொண்டர்கள் நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர் ஆண்களும், பெண்களும் கதறி அழுதபடியும் பிராத்தனை செய்தபடியும் கொட்டும் பனியிலும் அப்பல்லோ முன்பு காத்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க அப்பல்லோவுக்கு சென்று திரும்பிய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகரிடமிருந்து இதுவரை அறிக்கை ஏதும் வரவில்லை ஆளுநரின் அறிக்கைக்குப் பின்னர்தான் முதல்வரின் உடல்நிலை குறித்த தெளிவு கிடைக்கும் என்பதால் அனைவரும் காத்துள்ளனர். ஆனால் இதுவரை ஆளுநரின் அறிக்கை வெளியாகாமல் இருப்பதால் அனைவரும் தொடர்ந்து கவலையுடன் காத்துள்ளனர்.
ஜெயலலிதா மாரடைப்பு முதல் அப்பல்லோ அறிக்கை வரை.. பரபரப்பான நிமிடங்கள்!
முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியான தகவல் அதிமுக தொண்டர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை வளாகம் பரபரப்படைந்துள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22ம் தேதியில் இருந்து இன்று வரை 74 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். முதல் மருத்துவ அறிக்கையில் காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு என்று கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெளியான அறிக்கைகளில் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி அறிக்கை வெளியானது. முதல்வர் ஜெயலலிதாவிற்கு நுரையீரலில் நோய் தொற்று ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக சிகிச்சையில் இருக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டது.
அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, அளித்த பேட்டியில், முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வருவதாகவும், வீடு திரும்புவது பற்றி முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறி வந்தார். இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவனை வளாகம் இன்று மாலை முதலே பரபரப்படைந்தது. அந்த பரபரப்பான நிமிடங்கள். மாலை 4.30 மணி : அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டாவது வளாகம் பரபரப்படைந்தது
மாலை 5 மணி: முதல்வர் ஜெயலலிதாவிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் பரவியது மாலை 5.30 மணி : சென்னையில் இருந்த மூத்த அமைச்சர்கள், உயரதிகாரிகள் அப்பல்லோவிற்கு விரைந்தனர்.
மாலை 6 மணி : அப்பல்லோ மருத்துவமனை முன்பு அசாதாரணமான சூழ்நிலை நிலவியது. ராகுகால பூஜை துர்க்கைக்கு செய்ய சொல்லி அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இரவு 7 மணி: தமிழக காவல்நிலையங்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ளுமாறு அப்பல்லோவில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இரவு 8 மணி : அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ நோக்கி செல்லத் தொடங்கினர்.
இரவு 9.15 மணி: அப்பல்லோ அறிக்கை வெளியானது. முதல்வர் ஜெயலலிதாவிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாக அறிக்கை தெரிவித்தது.
இரவு 9.30 மணி : மும்பையில் இருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னைக்கு வர உள்ளதாக தகவல் வெளியானது.
இரவு 9.45 மணி அப்பல்லோவில் நடப்பது பற்றி உள்துறை அமைச்சா ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.
இரவு 10 மணி : அப்பல்லோவில் அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகள் அவசர கூட்டம் நடத்தினர்.
இரவு 10.15 மணி : அதிமுக தொண்டர்கள் கூட்டம் அதிகரிக்கவே, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி சென்னையில் நடக்கும் நிலவரம் குறித்து கேட்டறிந்ததாக தகவல் வெளியானது.
அப்பல்லோவிற்கு சென்ற ஆளுநர் வித்யாசகர் ராவ் … பத்தே நிமிடத்தில் திரும்பிச் சென்றார்!
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாலையில் மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோவிற்கு வந்து உடல் நலம் குறித்து நேரில் விசாரித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக செய்தி வெளியானதை அடுத்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னைக்கு சென்றிருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். ஜெயலலிதா உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இன்று மாலையில் ஜெயலலிதாவிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. அவர உடல் நிலையை இதயவியல், நுரையீலர் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை முதல் அப்போலோ வளாகம் பரபரப்படைந்தது. இந்த நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னைக்கு 11 மணியளவில் சென்றடைந்தார். விமான நிலையத்திலிருந்து அவர் ஆளுநர் மாளிகைக்கு சென்று விட்டு நள்ளிரவு 12.02 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களிடம் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து கேட்டறிந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், சரியாக 10 நிமிடங்கள் கழித்து மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார் . ஆளுநர் மாளிகையில் இருந்து அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.