குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்சியின் உள்முரண்பாடுகளை துரித கதியல் தீர்த்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக கடிதம் ஊடாக கட்சிக்கு அறிவித்துள்ளார்.
கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் நீடித்து வரும் முரண்பாடுகளுக்கு எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னதாக தீர்வு காணப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த திகதிக்குள் உள்முரண்பாடுகள் களையப்படாவிட்டால், உட்கட்சி பூசல் காணப்படும் கட்சிகளின் வரிசையில் முஸ்லிம் காங்கிரஸை தேர்தல் ஆணைக்குழு பட்டியலிட நேரிடும் என மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் செயலாளர் நாயகமாக ரீ.எம். ஹசன் அலி கடமையாற்றி வருவதுடன், செயலாளராக ஏ.சீ.ஏ.எம் மன்சூர் கடமையாற்றி வருகின்றார். தேர்தல் ஆணைக்குழு ஒரு செயலாளருடன் தொடர்பு கொள்வதனையே விரும்புவதாகவும் அதுவே நடைமுறை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே கட்சியின் செயலாளர் யார் யாருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதனை கட்சி தீர்மானித்து உடனடியாக அறிவிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.