13ஆவது திருத்தச் சட்டத்தை முறையாக அமுல்படுத்தினால் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கலாம் என்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் கருத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முரண்பட்டுள்ளார்.
கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் கணேசலிங்கத்தின் நினைவுதினம், கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது, 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினால் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கலாமென அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார். இதனை மறுதலித்த எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் சாசனத்தில் முதன்முறையாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 13ஆவது திருத்தச் சட்டம் வந்திருந்தாலும் கூட, தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு அது தீர்வாக அமையவில்லையெனக் குறிப்பிட்டார்.
அவ்வாறு தீர்வாக அமையவும் முடியாதென குறிப்பிட்ட சம்பந்தன், 13இலிருந்து இன்று வெகுதூரம் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
13ஆவது திருத்தத்தை சரியாக அமுல்படுத்தினால் அரசியல் தீர்வு கிடைக்கும் என்கிறார் சுவாமிநாதன்:
13ஆவது திருத்தச் சட்டத்தை முறையாக அமுல்படுத்தினால் தமிழ் மக்களின் முக்கிய அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வாகும் எனக் குறிப்பிட்ட அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், அதனை செய்யத் தவறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இன்று வடக்கிலும் கிழக்கிலும் 160,000 வீடுகள் தேவையாக உள்ளதென குறிப்பிட்டதோடு, இதனை கட்டிக்கொடுப்பதற்கு சிலர் இடையூறு விளைவிப்பதாகவும் ஐந்து வருடங்களின் பின்னர் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லையென தம்மை குறைகூற வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் உரிமைகளை பெற்று விடிவை காண்பதற்காக எல்லோரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வடக்கில் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றும் செயலணியில் தாம் அங்கம் வகிப்பதானது, வடக்கை முஸ்லிம்களுக்கு கொடுக்கும் செயலல்ல என சுட்டிக்காட்டிய சுவாமிநாதன், முஸ்லிம், சிங்களவர், தமிழர் என யாராக இருந்தாலும் அவர்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தால், அதற்கான அத்தாட்சி இருந்தால் அவர்களுக்கு குறித்த இடம் திருப்பி கொடுக்கப்பட வேண்டுமென்பதே தமது சிபாரிசு என மேலும் தெரிவித்தார்.