Home இந்தியா இரும்புப் பெண்மணியை இழந்த தமிழகம்…

இரும்புப் பெண்மணியை இழந்த தமிழகம்…

by admin

 

அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி தன் 68ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் (டிசம்பர்5) இரவு 11.30 மணிக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை  உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் என்று சொல்லி அனுமதிக்கப்பட்டவர் நுரையீரல் பிரச்னை, சுவாசக் கோளாறு, நோய்த் தொற்று என பல உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குணமடையவேண்டி தமிழகம் முழுக்க அ.தி.மு.க. தொண்டர்கள் பல்வேறு வழிபாடுகளை நடத்தி வந்தனர்.

ஜெயலலிதா உடல்நிலை தேறிவருவதாக அப்பல்லோ மருத்துவர்கள் சொல்லிவந்த நிலையில், டிசம்பர் 4ஆம் திகதி திடீரென அவருக்கு இதய முடக்கம் ஏற்பட்டதாகச் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் தெரிவித்தார்கள். இந்நிலையில் தொடர் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 5ஆம் திகதி இரவு 11:30 மணிக்கு காலமானார் ஜெயலலிதா.

தமிழகம் கடந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியிலும் இந்திய அரசியல் அரங்கிலும் இந்தச் செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா மறைவு, தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுக்கவே அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயலலிதா, 1948-ம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் திகதி கர்நாடக மாநிலம், மேல்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்தவர். பள்ளி செல்லும் பிராயத்திலேயே நடிக்கத் தொடங்கி, தமிழர்களின் அபிமான நடிகையாக தடம் பதித்தார்.

jaya_7_23536

அவர் மனதுக்குப் பிடித்துதான் நடிப்புத் தொழிலை தேர்ந்தெடுத்தார் என்று சொல்வதற்கில்லை… ஆனால், அதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டார். தன் முழு உழைப்பையும் கொட்டினார். ஆம், இதுதான் அவர் இயல்பே!  எதையும் அவரால் அரை மனதுடன் செய்ய முடியாது. இதை அவர் ஒரு நேர்காணலிலும் பகிர்ந்திருக்கிறார்.

இதனால்தான்  தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களிலும் முத்திரைப் பதித்து 120-க்கும் மேற்பட்ட  திரைப்படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களில், அவரால் நடிக்க முடிந்தது.

அரசியல் அரங்கில் அ.தி.மு.க உறுப்பினராக அடியெடுத்து வைத்த ஜெ. 1984-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலும், அவர் மிளிர்ந்தார். அவரது பேச்சாற்றலை மூத்த ஊடகவியலாளர் குஷ்வந்த் சிங் பாராட்டி இருக்கிறார்.

தன் தாய் சந்தியாவுக்கு அடுத்து இந்திரா காந்தியை ஜெயா மிகவும் நேசித்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் இறப்புக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர் ஜெயலலிதா. அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறக்கும்வரை அக்கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளராக இருந்தார்.

1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த எதிர்க்கட்சி அந்தஸ்தின் மூலம் தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார். 1991 தேர்தலில் வெற்றி பெற்று, முதல் முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல, 2001, 2011 மற்றும் 2016 ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக தேர்வானார்.

2001-’06 காலகட்டத்தில் டான்சி வழக்கு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. மேல் முறையீட்டில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் முதல்வரானார். அதே போல் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறை செல்ல நேர்ந்ததால், முதல்வர் பதவியை இழந்தார். பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டதால், 2015 மே மாதம், மீண்டும் தமிழக முதல்வரானார்.

2016 தேர்தலில் மீண்டும் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அரசியலில், எம்.ஜி.ஆர் காலத்துக்குப் பின்னர், ஒரு தலைவர் தொடர்ச்சியாக இருமுறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது என்றால், அது ஜெயலலிதாதான்!  தன்னம்பிக்கையும், மிகுந்த துணிச்சலும் கொண்ட ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்தவர். தற்போது முதல்வராக இருக்கும்போதே மரணமடைந்துள்ளார்.

‘புரட்சித் தலைவி’ என்றும், ‘அம்மா’ என்றும் அ.தி.மு.க-வினரால் கொண்டாடப்படும் செல்வி. ஜெ.ஜெயலலிதா உயிரிழந்தது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மாத்திரமின்றி ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!

இதேவேளை ஜெயலலிதாவின் உடல் இன்று அதிகாலையில் போயஸ் தோட்டத்திலிருந்து ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டு பொது மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் பூதவுடலின் மீது அதிமுக கட்சி கொடியும், அதற்கு மேலே இந்திய தேசிய மூவர்ண கொடியும் போர்த்தப்பட்டுள்ளது. ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி அரங்கத்தில், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கூடியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறுதி சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடக்கவுள்ளது என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் ராம மோகன ராவ் தெரிவித்துள்ளார்.

jaya0000_3099637a

ஏழைகள், பெண்கள் நலனில் அக்கறை கொண்டவர் ஜெயலலிதா: இந்தியப் பிரதமர் மோடி புகழஞ்சலி

ஏழைகள், பெண்கள் நலனில் அக்கறை கொண்டவர் ஜெயலலிதா என்று பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவர் தனது இரங்கல் செய்தியில், ஜெயலலிதாவின் மறைவு ஆழ்ந்த துயரத்தைத் தருகிறது. அவரது மறைவு, இந்திய அரசியலில் மிகப் பெரிய இடைவெளியை ஏற்படுத்திவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

குடிமக்களுக்கு நெருக்கமான ஜெயலலிதா, ஏழைகள் – பெண்களின் நலன் மீது அக்கறை கொண்டு எப்போதுமே தூண்டுகோலாகத் திகழ்பவர் என்றும் மோடி கூறியுள்ளார்.

இந்தத் துயர்மிகு தருணத்தில், தமிழக மக்களுக்காக பிரார்த்திக்கிறேன். இந்தப் பேரிழைப்பைத் தாங்கக் கூடிய வல்லமையை அவர்களுக்குத் தருமாறு ஆண்டவனை வேண்டுகிறேன் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பல தருணங்களில் ஜெயலலிதாவுடன் பேசும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். அவை நெகிழ்வான தருணங்கள். அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றும் அவர் மேலும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

28_23356ஜெயலலிதா புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்- கருணாநிதி அஞ்சலி

கட்சி ரீதியாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும், அவரது கட்சி நலனுக்காக பல துணிச்சலான காரியங்களை ஆற்றியவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்று  திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு சில நாளில் வீடு திரும்பவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலகப் புகழ் பெற்ற மருத்துவர்கள் எல்லாம் சிகிச்சை அளித்தும், அரசியல் கட்சி தலைவர்கள், லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள், தாய்மார்கள் வாழ்த்தியதற்கு மாறாகவும், ஜெயலலிதா மறைந்துவிட்டார் என்று செய்திக் கேட்டு வருந்துகிறேன் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

குறைந்த வயதில் இறந்துவிட்டார் என்ற போதும், அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. அவரை இழந்து வாடும் அவரது கட்சி முன்னணியினருக்கும், தொண்டர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கருணாநிதி மேலும் தெரிவித்தார்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More