Home இந்தியா தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பு ஈழத் தமிழர்களுக்கும் பேரிழப்பு- குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பு ஈழத் தமிழர்களுக்கும் பேரிழப்பு- குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

by admin

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் இழப்பு தமிழக மக்களை மாத்திரமின்றி ஈழ மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் டிசம்பர் 5ஆம் திகதி காலமானார் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மீண்டு வரவேண்டும் என்று கோடிக் கணக்கான தமிழக மக்களுடன் ஈழ மக்களும் வேண்டியிருந்தபோதும் அவரது மரணச் செய்தி எம்மை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தன்னுடைய தீர்மானங்களில், தன்னுடைய நடவடிக்கைகளில் மிக கடுமையாக பேசும் செயல்படும் முதல்வர் ஜெயலலிதாவின் முகத்தில் ஒரு மெல்லிய சோகக் கோடு இருக்கும். தன் சிறு வயதில் ஒரு நடிகையின் மகளாக அவர் சந்தித்த துயரம் மிகுந்த வாழ்க்கையின் பாதிப்பு அவரை விட்டு விலகவில்லை என்பதன் வெளிப்பாடே அக்கோடு என்றும் சிலர் சொல்வதுண்டு. தன் வாழ்வில் துரோகம், அவமானம், மகிழச்சி என்று எல்லாவற்றையும் ஜெயலலிதா அம்மையார் நினைவுபடுத்துவது தன் பால்ய கால வாழ்வையே.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் சினிமாத் துறையிலும் சரி, அரசியல் துறையிலும் சரி ஆணாதிக்க சூழலில்  அவர் அடைந்த இடம் என்பது அவருக்கு எதிரானவர்களையும் மலைக்க வைக்கும் சாதனையாகவே கருதப்படுகின்றது. சிறுமியாக தன் நடிப்பு பயணத்தை தொடங்கி தென்னிந்திய சினிமாத்துறையில் முன்னணி நாயகி நட்சத்திரமாக திகழ்ந்தார். அன்றைய முதன்மை நடிகராக இருந்த எம்.ஜி.ஆருக்கு ஈடாக நடித்தார். பின்னர் அரசியலில் நுழைந்தார்.
 jeya1
சிறு வயதிலிருந்தே ஆளுமை கொண்டவராகவும் ஓர்மம் மிக்க பெண்ணாகவும் சாதனைகளைப் புரிபவராகவும் முதல்வர் ஜெயலலிதா விளங்கினார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அனைந்திந்திய திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு பட்ட காலத்தில் அக் கட்சியையும் சின்னத்தையும் மீட்டு 1989இல் தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித் தலைவராக ஜெயலலிதா சென்றார். அங்கு அவர் முகம் கொண்ட சொற்களும் அவரைக் கடுமையாக தாக்கின. இனி சட்ட மன்றத்திற்குள் வந்தால் முதலமைச்சராகவே வருவேன் என்று சபதம் செய்து சென்ற ஜெயலலிதா 1991இல் தமிழகத்தின் முதல் இளம்பெண் முதல்வராக சட்டசபைக்குள் நுழைந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் ஈழ மக்களின் தனி ஈழ கோரிக்கைக்கு எதிராகவும் ஒரு காலத்தில் பேசியிருந்தார். இன்று அவர் அமரத்துவமடைந்த நிலையில் சிலர் இதனை சுட்டிக் காட்டுகின்றனர். ஆரம்ப காலத்தில் ஜெயலலிதா இத்தகைய நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும் பிற்காலத்தில் தமிழக மக்களின் மனநிலை உணர்ந்தும் தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்றும் தன்னை மாற்றிக் கொண்டார். அவர் அவ்வாறு பேசியிருந்தாலும் தமிழகத்தின் ஆதரவையும்  அனைத்துலக ஆதரவையும் புலிகள் அமைப்பு தொடர்ந்து கோரியது.
ஈழத்தில் போர் நடைபெற்ற சமயத்தில் தமிழகத்தில் நடந்த போலிப் போராட்டங்களைக் கண்டித்த ஜெயலலிதா “இந்திரா காந்தி எந்த சர்வதேச சட்டத்தைப் பின்பற்றி வங்கதேசத்திற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ, அதே சட்டத்தை பின்பற்றி, அதே தர்ம நியாயங்களை பின்பற்றி, நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பி அங்கே ‘தனி ஈழம்’ அமைக்க நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறினார். ஈழத் தமிழர் போராட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த ஜெயலலிதாவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது ஈழத்தில் இனப்படுகொலை நடந்த காலத்தில்தான்.
jeya2செப்டம்பர் 16 2015 கடந்த வருடம் ஜெயலலிதா அம்மையார் தமிழக சட்டசபையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து “இலங்கை தமிழர்களின் நீண்ட நெடிய உரிமை போராட்டத்தை உருக்குலைக்கும் வண்ணம், இலங்கை தமிழினத்தையே ஒழித்து கட்ட வேண்டும் என்ற நோக்கில் பல்லாண்டுகளாக திட்டம் தீட்டி, அதனை வெற்றிகரமாக 2009-ம் ஆண்டு நிறைவேற்றியது இலங்கை அரசு. 2009-ம் ஆண்டு, இலங்கை உள்நாட்டு போர் உச்சகட்டத்தில் இருந்த நிலையில் சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி, லட்சக்கணக்கான அப்பாவி இலங்கை தமிழர்களைக் கொன்று குவித்து, ஓர் இனப்படுகொலையை இலங்கை அரசாங்கம் நடத்தியது.” என சட்டசபையில் உரையாற்றினார்.
10 மார்ச் 2015ஆம் நாள் வடக்கு மாகாண சபை இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இதனை அடிப்படையாக கொண்டு தமிழக முதல்வர் தன்னுடைய தீர்மானத்தை முன்மொழிந்தார். வடக்கு மாகாண சபை என்பது வடக்கு கிழக்கு மக்களின் மிக முக்கியமான கோரிக்கையை, உணர்வை, போராட்டத்தை வெளிப்படுத்தும் மக்களின் ஜனநாயக சபை. அந்த தீர்மானத்தின் அடிப்படையிலேயே இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழக முதல்வர் கொண்டு வந்தார்.
இதேவேளை இந்த  ஆண்டு  ஜூன் மாதம் 14ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்த தமிழக முதல்வர் ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஐ.நா போன்ற அனைத்துலக அரங்கில் இலங்கையின் இனப்படுகொலை குற்றத்திற்கு தண்டனை வழங்கும் வகையில் இந்தியா செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
jeya3இலங்கையில் 2013இல் நடைபெற்ற  கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று அன்றைய பிரதமர் மன்மோசிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.  கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே தமிழ் மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு மாநாட்டை புறக்கணிக்க வேண்டும். இம்மாநாட்டை புறக்கணிப்பதன் மூலம் இலங்கைக்கு இந்தியா அழுத்தம் தரலாம். ஏற்கனவே மார்ச் மாதம் அனுப்பிய கடிதத்தில், இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.  இலங்கை அரசு ஈழத் தமிழகளுக்கு எதிராக இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்குற்றங்களை செய்துள்ளது. காமன்வெல்த் மாநாட்டு அமைப்புக்கான கொள்கைகளை இலங்கை நசுக்கியுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், அதன் அனைத்துக் குற்றங்களையும் இந்தியா ஏற்றுக் கொண்டதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான செயலாகவும் ஆகிவிடும் என்றும் தன் கடித்தில் எழுதியிருந்தார்.
இதேவேளை 2013 மார்சட 27ஆம் திகதி ஈழப் பிரச்சினைக்கு தனித் தமிழீழமே தீர்வு என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தை கொண்டு சட்ட சபையில் உரையாற்றினார் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. அதில்  “இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும்; இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும்; தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும்; ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு “தனி ஈழம்” குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்றும் முழங்கினார்.

jeya4போர்க்குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று 2011இல் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பின்னர் குறிப்பிட்டார். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை உலுப்பிய இந்தி அரசியல் தலைவராகவும் சிங்களப் பேரினவாதிகளுக்கு பெரும் அச்சத்தை உருவாக்குபவராகவும் ஜெயலலிதா காணப்பட்டார். ஜெயலலிதாவின் நிலைப்பாடுகளைக் கண்டு  சில சமயங்களில் சிங்களப் பேரினவாதிகளும் சில சிங்கள ஊடகங்களும் அவரை தரம் தாழ்ந்து சென்று கொச்சைப்படுத்திய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

 

ஈழத் தமிழர்கள்சர்வதேச மட்டத்தில் நீதியை வலியுறுத்தும் அதேவேளை இலங்கையில்  சுயமரியாதையுடன் வாழ சுயாட்சியை கோரும் ஒரு அரசியல் போராட்டத்தில் வாழும் இன்றைய சூழலில் தமிழக முதல்வரின் இழப்பு ஈழத் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும். சிங்கள அரசு இழைத்த அநீதிகளுக்கு நீதி வேண்டும், இலங்கை இனப்பிரச்சினைக்கு தனி ஈழமே தீர்வு முதலிய ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகளை தமிழகத்தின் பெருங்குரலாக வலியுறுத்தியவர் என்ற வகையில் ஈழச் சரித்திரத்திலும் தமிழக முதல்வரின் பங்களிப்பு எக்காலத்திலும் மறக்க இயலாதது ஆகும்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
jeya5

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More