குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பொருத்து வீடுகள் தொடர்பில் பாராளுமன்றில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. வடக்கில் இடம்பெயர் மக்களுக்கு பொருத்து வீடுகள் அமைத்துக் கொடுக்கும் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
பொருத்து வீட்டுத் திட்டத்தை முன்னெடுத்து வரும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் பதவி விலக வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பல்வேறு வழிகளில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் திட்டத்தை அமைச்சர் முன்னெடுப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பது குறித்து யோசனை முன்வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கு மக்களுக்கு பொருத்து வீடுகள் தேவையில்லை எனவும், நிரந்தர வீடுகளே அமைத்துக் கொடுக்கப்படவேண்டுமெனவும் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.