குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புகையிலை உற்பத்தித் துறையிடமிருந்து உதவி பெற்றுக்கொள்ளத் தயாரில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புகையிலை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சிகரட் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து எந்தவொரு நிதி உதவியையும் பெற்றுக்கொள்ளத் தயாரில்லை என குறிப்பிட்டுள்ள அவர் தேசிய சுகாதாரக் கொள்கைகளை அமுல்படுத்துவற்கு அரசாங்கம் சுயமான திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களின் சுகாதாரம் பற்றி முன்னுரிமை வழங்கப்படும் எனவும் நாட்டில் உடல் ஆரோக்கியத்துடன் கூடிய மனித வளம் காணப்பட்டால் மட்டுமே அபிவிருத்தி இலக்குகளை எட்ட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொள்கைகளுக்கு அமைய இலங்கையில் புகையிலை பயன்பாடு மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டுத் தடைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.