குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புலனாய்வுப் பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி தொடர்பில் விசாரணை நடத்தப்படாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. புலனாய்வுப் பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி சிசிர மெண்டிஸிற்கு எதிரான சித்திரவதைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு கோரியிருந்தது.
எனினும், சிசிர மெண்டிஸிற்கு எதிராக விசாரணை நடத்தப்படாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். சிசிர மெண்டிஸிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றை எனவும் இதனால் விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்யுள்ளார்.
எவ்வாறெனினும் சித்திரவதைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் சிசிர மெண்டிஸ் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிசிர மெண்டிஸ் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் – ஐ.நா
Dec 7, 2016 @ 21:00
குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் சிசிர மெண்டிஸ் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் அமர்வுகளில் இலங்கையின் சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகளில் சிசிர மெண்டிஸூம் பங்கேற்றிருந்தார்.
இந்தப் பிரதிநிதிகள் குழுவில் சிசிர மெண்டிஸ் அங்கம் வகித்தமை அதிர்ச்சியளிப்பதாக ஐக்கிய நாடுகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக சிசிர மெண்டிஸ் கடமையாற்றியிருந்தார்.
மஹிந்த ஆட்சிக் காலத்தில் இலங்கையில் பல்வேறு சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குற்ற விசாரணைப் பிரிவினர் மீது சுமத்தப்படும் சித்திரவதைக் குற்ற்சாட்டுக்களில் சிசிர மெண்டிஸின் பங்களிப்பு குறித்து விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு, அரசாங்கத்திடம் கோரியுள்ளது.