குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கு கடன் வழங்க வேண்டாம் என அமெரிக்காவின் முன்னாள் ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன், சர்வதேச நாணய நிதியத்திற்கு அழுத்தம் கொடுத்தார் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராஜாங்கச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில், இலங்கைக்கு கடன் வழங்கப்படக் கூடாது என ஹிலரி அழுத்தங்களை பிரயோகித்தார் எனவும் ஹிலரி கிளின்ரனின் தேர்தல் தோல்வி இலங்கைக்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்தாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது தாம் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்ததாகத் தெரிவித்துள்ள அவர் எவ்வாறெனினும் அமெரிக்க அழுத்தங்களுக்கு அடி பணியாது அப்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் ஸ்ட்ரோஸ் கான், இலங்கைக் கடன் வழங்கினார் எனவும் அதற்கு நன்றி பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான நிதி உதவிகளை இடைநிறுத்துமாறு கிளின்ரன், மின்னஞ்சல் ஊடாக சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியிருந்தார் எனவும் அது பற்றிய விபரங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.