பிரித்தானியர்களினால் தேசத்துரோகிகள் என பிரகடனப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டிருந்த 19 சிங்கள வீரர்களை குறித்த குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்து, அவர்கள் அனைவரும் சுதந்திர இலங்கைக்காக தேசப்பற்றுடன் போராடிய வீரர்கள் என இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
1818 ஆம் ஆண்டு ஊவா வெல்லெஸ்ஸ புரட்சிக்கு தலைமை தாங்கியதன் காரணத்தினால் அவர்களுக்கு இக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்ததுடன், அப்போது இலங்கையிலிருந்த பிரித்தானிய ஆளுனரான ரொபேட் பிரவுண்ரிக்கினால் 1818ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட பிரகடனத்தின் மூலம் மேற்படி வீரர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என பெயர் குறிப்பிடப்பட்டனர்.
நீண்ட காலமாக உறுதிப்படுத்தப்பட்டிருந்த பிரித்தானிய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அப்பிரகடனம், ஜனாதிபதியினால் இன்று ( 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி )கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட விசேட பிரகடனத்தின் மூலம் இரத்துச் செய்யப்பட்டது.