Home இலங்கை ஜெயலலிதா – செல்வி-புரட்சித்தலைவி-அம்மா : நிலாந்தன்

ஜெயலலிதா – செல்வி-புரட்சித்தலைவி-அம்மா : நிலாந்தன்

by admin

ஒட்டுமொத்தத் தமிழ்ப்பரப்புக்கூடாகப் பார்த்தால் ஜெயலலிதா மிக அரிதான ஒரு பேராளுமை. ஈழத்தமிழ் நோக்குநிலையில் இருந்து பார்த்தால் அவர் ஒரு காலகட்டத்தில் எதிரானவராகத் தோன்றுகிறார். இன்னொரு காலகட்டத்தில் நட்பானவராகத் தோன்றுகிறார்.

ஒட்டுமொத்தத் தமிழ்ப்பரப்பில் ஆங்காங்கே துருத்திக் கொண்டு தெரியும் பெண்ணிலை வாதிகளோடு ஒப்பிடுகையில் ஜெயலலிதா தன்னை ஒரு பெண்ணியவாதியாகக் காட்டிக்கொண்டவரல்ல. அவர் உருவாகி வந்த பாதையும் அதாவது தென்னிந்தியச் சினிமாப் பாதையும் பெருமளவிற்கு அதற்குரியதல்ல. பெண்ணை ஒரு போகப் பொருளாக, கவர்ச்சிப் பொருளாக சித்திரிக்கும் ஒரு சினிமா மரபிற்கூடாகவே ஜெயலலிதா மேலெழுந்தார். அவர் ஏற்று நடித்த பாத்திரங்களில் பெரும்பாலானவை மேற் சொன்ன மரபிற்குரியவைதான். அந்த மரபின் ஓர் உற்பத்தியாகிய எம்.ஜி.ஆர் தான் அவரை அரசியலுக்குள் இழுத்தார்.

பெண்ணிலை வாதம் தொடர்பில் ஜெயலலிதா பெரியளவிற்கு கோட்பாட்டு விளக்கங்களைக் கொண்டவராக தோன்றவில்லை. இந்தியாவில் பெண்ணியவாதிகளாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் பேராளுமைகளோடு அவர் கோட்பாட்டு ரீதியிலான தோழமையைப் பேணியவராகவும் தெரியவில்லை. ஆனால் ஆண்மைய உலகில் ஒரு பெண் என்பதற்காகவே அவர் நசுக்கப்பட்ட போதெல்லாம் அதற்கெதிராக வன்மத்தோடும், றாங்கியோடும் அவர் மேலெழுந்தார். அங்கேதான் ஜெயலலிதா என்ற ஒரு பெண் ஆளுமை பெருமளவிற்கு ஆண்மைய தமிழ் உலகில் அரிதான ஒன்றாக உருவாகியது.

எம்.ஜி.ஆர் தான் அவரை அரசியல்வாதி ஆக்கினார். ஆனால் அதற்கு முன்னரே அவர் ஒரு நட்சத்திரமாக பிரகாசித்துக் கொண்டிருந்தார். சினிமாவில் தான் பெற்ற பிரபல்யத்தை அவர் அரசியலில் முதலீடு செய்தார் என்பதே சரி. ஆனால் அவருடைய அரசியல் பாதை இலகுவானதல்ல. நவீன இந்திய அரசியலில் இறங்கிய பெண் ஆளுமைகளோடு ஒப்பிடுகையில் ஜெயலலிதாவைச் செதுக்கிய அனுபவங்கள் அவமானகரமானவை. கொடுமையானவை.

அவரை அரசியலுக்குள் இறக்கிய எம்.ஜி.ஆர் அவரை தன் உத்தியோகபூர்வ வாரிசாகப் பிரகடனப்படுத்தவில்லை. எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையில் இருந்த நெருக்கம் பகிரங்கமானது. ஆனால் உத்தியோகபூர்வமானதல்ல. இந்தியப் பண்பாட்டுக் கண் கொண்டு நோக்கும் போது அந்த உறவுக்கு உயர்வான அங்கீகாரம் இருக்கவில்லை. அவ்வாறான ஓர் அங்கீகாரத்தை அவருக்குப் பெற்றுக் கொடுக்க எம்.ஜி.ஆரும் துணியவில்லை. இப்படிப் பார்த்தால் ஆண்மைய உலகில் அவரைச் சுரண்டிய ஆண் ஆளுமைகளுக்குள் எம்.ஜி.ஆரும் அடங்குவார். எம்.ஜி.ஆரின் மரணச்சடங்கில் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட அவமானங்களுக்கும், காயங்களுக்கும் அதுவும் காரணம்.

சட்டசபையில் எதிர்க்கட்சிக்காரர்கள் அவரைத் துகில் உரிந்ததற்கும் அதுவே காரணம். முதலாவதாக அவர் ஓர் அங்கீகரிக்கப்பட்ட உறவுக்கூடாக மேலெழாதவர் என்பது. இரண்டாவது அவர் ஒரு பெண்ணாக இருந்தது. எம்.ஜி.ஆர் பெற்றுக் கொடுக்கத் தவறிய அங்கீகாரத்தை பெறுவதற்கான ஒரு போராட்டமாகவே அவருடைய அரசியல் வாழ்வின் பெரும்பகுதி அமைந்து விட்டது.

பாலியல் சுதந்திரம் அதிகமுடைய மேற்கத்திய ஜனநாயகப் பரப்புக்களில் குறிப்பாக அமெரிக்காவில் ஒருவர் அரசுத் தலைவராக வர விரும்பினால் அவரது குடும்ப வாழ்வு உற்றுக் கவனிக்கப்படும். அவர் ஒரு மகிழ்ச்சியான இல்லறத்தை கொண்டவரா என்பது அவரை தெரிவு செய்வதற்கான முக்கிய தகுதிகளில் ஒன்றாக பார்க்கப்படும். ஆனால் பாலியல் சுதந்திரம் மிகக் குறைந்ததும் இல்லறத்தை உயர்வாகப் போற்றுவதுமாகிய இந்திய சமூகத்தில் ஒரு தலைவரைத் தெரிவு செய்யும் பொழுது அவரது குடும்ப வாழ்க்கை முக்கிய முன் நிபந்தனையாக கொள்ளப்படுவதில்லை.

இந்தியப் பண்பாட்டில் இல்லறத் தலைவியாக இருப்பது என்பது ஒரு பெண்ணுக்கு அதிகம் பாதுகாப்பானதாகப் பார்க்கப்படுகிறது. திருமணம் ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப்பிரதான திருப்பமாகக் கருதப்படுகிறது. இந்தியக் காப்பிய மரபில் பிரகாசித்த பெரும்பாலான பெண் ஆளுமைகள் குடும்பப் பெண்களே. ஆனால் நவீன இந்திய அரசியலில் துருத்திக் கொண்டு மேலெழுந்த எல்லாப் பெண் ஆளுமைகளும் திருமண வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் என்பதல்ல. ஜெயலலிதா மேற்கு வங்கத்தின் மம்தா பனெர்ஜி உத்தர பிரதேசத்தின்; மாயாவதி போன்றோர் தனியன்களே.

இந்தியக் காப்பியங்களும், இதிகாசங்களும் அநேகமாக ஆண் மைய, குடும்ப மைய நோக்கு நிலையிலிருந்து எழுதப்பட்டவைதான். அவற்றில் ஆண்களே மையப் பாத்திரங்கள். இவ்வாறான ஆண் மைய இதிகாச மரபில் ஒரு பெண் மையப் பாத்திரத்தை கட்டியெழுப்பியவர் அரவிந்தர். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு அதில் ஈடுபட்டு சிறை சென்றவர். அங்கிருந்து ஆன்மீக வாதியாக வெளிவந்து பாண்டிச்சேரியில் தனது ஆச்சிரமத்தை நிறுவியவர். அவர் மகாபாரதத்தில் உள்ள சத்தியவான் சாவித்திரி என்ற கிளைக் கதையில் வரும் சாவித்திரியை மையமாகக் கொண்டு சாவித்திரி என்ற பெயரில் ஒரு காப்பியத்தை உருவாக்கினார்.

மரணத்தை வென்றவள் சாவித்திரி. கணவனின் உயிரிற்காக அவள் மரணத்தோடு மோதினாள். காதல் எப்படி மரணத்தை வெல்ல முடியும் என்பதற்கு அவள் ஒரு காப்பிய உதாரணம். அரவிந்தர் சாவித்திரியை மரணத்தை வெற்றி கொண்ட காதலின் குறியீடாக மட்டும் காணவில்லை. ஆண் மையக் காப்பியப் பரப்பில் ஒரு பெண்ணை மையமாக வைத்து அவர் தனது காப்பியத்தைக் கட்டியெழுப்பினார். அவருடைய சாவித்திரி ஒரு விடுதலையின் குறியீடு. அது லௌகீக விடுதலையையும் குறிக்கும் ஆன்மீக விடுதலையையும் குறிக்கும். சாவித்திரியை முன்வைத்து அரவிந்தர் மனிதனின் ஆன்மீகக் கூர்ப்பை அதன் அறிவியல் மற்றும் ஆன்மீகத் தளங்களில் விவாதிக்கின்றார்.

அரவிந்தரைப் போலவே பாரதியாரும் மகாபாரதத்தில் இருந்து பாஞ்சாலியை தனித்தெடுத்தார். அவளை மையமாகக் கொண்டு பாஞ்சாலி சபதத்தை எழுதினார். அதுவும் ஒரு பெண்மையக் குறுங்காவியம்தான். பாரதியின் பாஞ்சாலி பெண் விடுதலையின் குறியீடாக வருகின்றாள். பெண்ணை சூதாட்டத்தில் பகடைக்காயாக வைக்கும் ஒரு பாரம்பரியத்தையும் மரபையும் அவள் உடைத்துக் கொண்டு மேலெழுகிறாள். பாஞ்சாலியின் சபதம் இல்லையேல் பாரதப் போரும் இல்லை. ஒரு பெண்ணுக்கு உண்டாகிய அவமானத்தின் விளைவே பாரதப் போர் எனலாம்.

சாவித்திரியும் சரி பாஞ்சாலியும் சரி குடும்பப் பெண்களே. ஆனால் ஜெயலலிதாவோ, மம்தா பனெர்ஜியோ மாயாவதியோ அவ்வாறல்ல. பூலான் தேவியும் அவ்வாறல்ல.

இந்தியப் பண்பாட்டு நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் ஜெயலலிதாவின் குடும்பவாழ்க்கைவெற்றிகரமானதல்ல. முன்னுதாரனமானதுமல்ல. தாயின் மரணத்தின் பின் அவர் நட்புக்கே முன்னுரிமை கொடுத்தார். சசிகலாவுக்கும் அவருக்கும் இடையிலான உறவு அதிகம் சர்ச்சைகளுக்குள்ளாகியது. இடைக்கிடை உடைந்து அதன் பின் ஒட்டும் வகையிலானது. பண்பாட்டு நோக்கு நிலையில் அதிகம் விமர்சனத்திற்குள்ளாகியது. ஆனால் அந்த சர்ச்சைகள் விமர்சனங்களுக்காக ஜெயலலிதா சசிகலாவைக் கைவிடவே இல்லை. இது விடயத்தில் அவர் இந்தியப் பண்பாட்டு அளவு கோல்களுக்குள் அடங்க மறுத்த ஒரு முரணியாகவே மேலெழுந்தார்.

இவ்வாறு ஒரு பண்பாட்டு முரணியாக காணப்பட்ட ஒரு தலைவி ஜனவசியம் மிக்கவராகவும் மேலெழுந்தமை என்பது மிக நூதனமான ஒரு புறநடைதான். ஒரு குடும்பப் பெண்ணாக அவரால் வெற்றி பெற முடியவில்லை. ஆண்மைய உலகம் ஒரு செல்வியாக வாழுமாறு அவரை நிர்ப்பந்தித்தது. அவரும் ஒரு செல்வியாகவே தனது தலைமைத்துவத்தை ஸதாபிப்பதில் வெற்றியடைந்து இறுதியாக அம்மாவாக உயிரை நீத்தார். அவர் செல்வியாக வாழ்ந்தமை என்பது ஆண்மைய உலகில் அவர் ஒரு பாதிக்கப்பட்ட பெண் என்பதை மட்டும் காட்டவில்லை. கூடவே எல்லாவிதமான பாதிப்புக்களுக்குப் பின்னாலும் ஒரு செல்வியாக தன்னால் நின்று நிலைக்க முடியும் என்பதை அவர் நிரூபித்துக் காட்டினார். திருமணம் தான் ஓர் இந்தியப் பெண்ணுக்கு பாதுகாப்பானது, கௌரவமானது என்றிருந்த ஒரு பாரம்பரியத்தை உடைத்துக் கொண்டு ஒரு செல்வியாக நிமிர்ந்தவர் ஜெயலலிதா.

ஜெயலலிதா, மம்தா, மாயாவதி ஆகிய மூவரையும் ஒப்பிட்டு இந்தியன் எக்ஸ்பிரசில் ராதிகா ஐயங்கார் எழுதிய ஒரு கட்டுரையில் ஒரு முக்கிய விடயத்தைச் சுட்டிக் காட்டுகிறார். தமிழகத்தில் ஜெயலலிதா தன்னை அம்மாவாக ஸ்தாபித்துக் கொண்டார். மேற்கு வங்கத்தில் மம்தா தன்னை னனைi ஆக அதாவது மூத்த அக்காவாகஸ்தாபித்துக் கொண்டார். உத்தர பிரதேசத்தில் மாயாவதி தன்னை டிநாநதெi ஆக அதாவது மூத்த அக்காவாக ஸ்தாபித்துக் கொண்டார்; என்று ராதிகா ஐயங்கார் சுட்டிக் காட்டுகிறார். இந்த மூவருமே தங்களுக்குப் பின் அரசியல் வாரிசுகளை உருவாக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இல்லறந்தான் ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பானது என்று நம்பும் ஒரு சமூகத்தில் இல்லறத்தில் நாட்டங் காட்டாத இந்த மூன்று பெண் ஆளுமைகளும் எந்தப் பாரம்பரியத்துக்கு முரணாக தனியன்களாக மேலெழுந்தார்களோ அதே பாரம்பரியத்தின் ஓர் அம்சமாகக் காணப்பட்ட பெண்மையின் அரவணைக்கும் பண்பை தமது அரசியலுக்கு நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள். இந்தியப் பண்பாட்டில் அம்மா,மூத்த அக்கா ஆகிய பெண் பாத்திரங்களுக்குள்ள உணர்ச்சிகரமான உறவுமுறை முக்கியத்துவத்தை தமது அரசியலுக்கு முதலீடு ஆக்கினார்கள். எந்தப் பண்பாட்டுப் பரப்பில் முரணிகளாக அவர்கள் மேலெழுந்தார்களோ அந்தப் பண்பாட்டினால் அவர்களுக்குப் போர்த்தப்பட்ட மென்னாடையை கிழித்தெறிந்து விட்டு அந்தப் பண்பாட்டின் தாக்குதல்களிலிருந்தும் தமது அரசியல் எதிரிகளின் தாக்குதல்களிலிருந்தும் தமது உட்கட்சி போட்டியாளர்களின் தாக்குதல்களிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இரும்புக் கவசங்களை அணிந்து கொண்டார்கள்.

ஜெயலலிதா ஒரு விதத்தில் இந்திய அரசியலின் பொதுப் பண்புகளில் ஒன்றாகிய வாரிசு அரசியலின் விளைவாக அரசியலுக்குள் வந்தவர்தான். ஆனால் அவருடைய விசயத்தில் கொடுமையான புறநடை என்னவென்றால் அவர் ஒரு உத்தியோகபூர்வ வாரிசோ அங்கீகரிக்கப்பட்ட வாரிசோ அல்ல என்பதுதான். புறக்கணிப்புக்களும், அவமதிப்புக்களுமே அவரைச் செதுக்கின. அங்கீகாரத்திற்கான ஒரு போராட்டமாகவே அவருடைய அரசியல் வாழ்வு அமைந்து விட்டது. அதில் ஏற்பட்ட சவால்களையும், காயங்களையும் அவர் றாங்கியோடு எதிர்கொண்டார். றாங்கிதான் அவருடைய அடையாளம் அதுதான் அவருடைய பலம் அதுதான் அவருடைய பலவீனமும். தன்னை அவமதித்த புறக்கணித்த உதாசீனம் செய்த அங்கீகரிக்க மறுத்த ஒரு பண்பாட்டின் பிரதானிகளை தனது காலில் விழ வைத்தார். ஆனால் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் அந்த வழக்கத்தை இல்லாதொழித்தார்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவரிடம் கொள்கைத் தொடர்ச்சி இருக்கவில்லை. எம்.ஜி.ஆருக்குப் பின் அவரை ஈழத் தமிழர்கள் எம்.ஜி.ஆரின் வாரிசு என்பதற்காக அதிகம் எதிர்பார்ப்போடு பார்த்ததுண்டு. ஆனால் ரஜீவ்காந்தி கொல்லப்பட்ட பின் அவர் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பில் ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை. மிகவும் நெருக்கடியான தருணங்களில் அவர் ஈழத்தமிழர்கள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் இலங்கை அரசாங்கத்துக்கு உற்சாகமூட்டுபவையாகக் காணப்பட்டன. கருணாநிதியால் தொடக்கப்பட்ட சிறப்பு முகாம்களை அவர் தொடர்ந்தும் பேணினார்.
ஆனால் இந்தியாவில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் மத்தியில் ஓர் அபிப்பிராயம் உண்டு. கருணாநிதி இணக்கமானவரைப் போலத் தோன்றினாலும் அவருடைய ஆட்சிக் காலங்களில் ஈழத் தமிழர்களுக்கு ஒப்பீட்டளவில் அதிகம் நெருக்கடிகள் ஏற்படுவதுண்டு. ஆனால் ஜெயலலிதா வெளித்தோற்றத்திற்கு இறுக்கமானவராகத் தோன்றினாலும் அவருடைய ஆட்சிக் காலங்களில் நடைமுறையில் ஈழத் தமிழர்களின் மீதான நெருக்கடிகள் ஒப்பீட்டளவில் குறைவாகக் காணப்படுவதுண்டு என்பதே அந்த அபிப்பிராயமாகும்.
புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின் ஈழத்தமிழர்களை தத்தெடுக்க முயற்சித்த பலருள் ஜெயலலிதாவும் ஒருவர். தோல்வியினாலும் இழப்புக்களினாலும் கூட்டுக் காயங்களினாலும் சுருண்டு போய்க்கிடந்தஈழத் தமிழர்களுக்கு அவருடைய தீர்மானங்களும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்த கருத்துக்களும் ஆறுதல் அளித்தனஉற்சாகமூட்டின. சீமான் அவரை ஈழத்தாய் என்றும் அழைத்தார்.ஈழத் தமிழ் நோக்கு நிலையிலிருந்து அவர் மீதான எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துச் சென்ற ஒரு காலப்பகுதியில் அவர் உயிர்நீத்திருக்கிறார்.
இந்தியப் பண்பாட்டுப் பரப்பில் அவர் ஒரு முரணிதான். ஒரு தனியன்தான். பல்லாயிரக்கணக்காண ஆண்டுகால பாரம்பரியம் ஒன்றின் கைதியாக இருக்க அவர் விரும்பவில்லை. அதே சமயம் அரசியலைப் பொறுத்தவரை இந்தியப் பேரரசின் நன்கு ஸ்தாபிக்கப்பட்ட ஒரு சிஸ்ரத்தின் கைதிதான் அவரும். அதை மீறி எழும் அளவிற்கு புரட்சிகரமான கோட்பாட்டு உள்ளடக்கம் எதுவும் அவரிடம் இருக்கவில்லை. அந்தப் பேரரசு சிஸ்ரத்தின் கைதியாக இருந்த படியால்தான்ஈழத் தமிழருக்கான அவருடைய ஆதரவு எனப்படுவது துணிச்சலான தீர்மானங்களுக்கும் அப்பால் நகரவில்லை. அத் துணிச்சலான தீர்மானங்கள் கூட ஒரு விதத்தில் அவருடைய அரசியல் எதிரிகளை தோற்கடிக்கும் நோக்கிலானவைதான்.
ஈழத் தமிழர் விவகாரத்தை தமிழ் நாட்டில் வேறு எந்தக் கட்சியும் அல்லது செயற்பாட்டு இயக்கங்களும் தத்தெடுக்க முடியாதபடிக்கு அவர் எல்லாரையும் விடக் கடுந் தீவிரமான தீர்மானங்களை நிறைவேற்றினார். அதன் மூலம் தமிழ் நாட்டில் ஈழத்தமிழர் விவகாரத்தை தனது கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்க முற்பட்டார்.இதனால் கட்சி எதிரிகளை மட்டும் அவர் மேவி எழவில்லை. அதோடு சேர்த்து ஈழத்தமிழர் விவகாரத்தை செயற்பாட்டு இயக்கங்கள் கைப்பற்றுவதையும் அவர் தவிர்த்தார். மிகவும் உணர்ச்சிகரமான ஈழத்தமிழர்கள் விவகாரமானது தமிழ் நாட்டில் கட்சி அரசியலுக்குள் சிக்குண்டிருப்பதையே இந்தியப் பேரரசுக்கட்டமைப்பும் விரும்பியது. ஜெயலலிதா தெரிந்தோ தெரியாமலோ அதைத்தான் செய்தார். அதாவது அந்த சிஸ்ரத்திற்குள்தான் அவரும் நின்றார்.

அவர் நோய்வாய்ப்பட்டிருந்த போது அது ஒரு பரம ரகசியமாகவும் மர்மக் கதை போலவும் பேணப்பட்டது. இது ஏறக்குறைய கெடுபிடிப் போர் காலகட்டத்தில் கொமியூனிஸ்ற் தலைவர்கள் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது இறந்தாலோ அந்தச் செய்தி எவ்வாறு கையாளப்பட்டதோ அதற்கு நிகரானது. இப்பொழுதும் சில மாதங்களாக வடகொரியத் தலைவரின் மனைவியைக் குறித்து ஊடகங்களில் வெளிவரும் ஊகங்களை இங்கு சுட்டிக் காட்டலாம். ஆனால் ஜெயலலிதா தலைவியாக இருந்தது ஒரு ஜனநாயக கட்டமைப்புக்குள் ஆகும். அவர் நோய்வாய்ப்பட்டிருந்த காலம் தொடக்கம் இறப்பு வரையிலுமான காலகட்டம் எனப்படுவது வதந்திகளையும் ஊகங்களையும் உற்பத்தி செய்யும் ஒரு காலகட்டமாகவே காணப்பட்டது. இதற்குக் காரணம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக கட்டமைப்பு ஒன்றுக்குள் ஓர் இரும்புக் கோட்டையை நிர்மாணித்து அதற்குள் ஓர் இரும்பு மனுஷpயாகவும் அம்மாவாகவும் அவர் வீற்றிருந்தார் என்பதுதான்.

இது ஒரு விதத்தில் இந்திய ஜனயநாயகத்தின் நூதனப் பண்புகளில் ஒன்று எனலாம். அதற்குள் இந்திராகாந்தியும் இருக்கிறார், பூலான் தேவியும்இருக்கிறார்,மாயாவதியும்இருக்கிறார், மம்தா பனெர்ஜியும்இருக்கிறார், ஜெயலலிதாவும்இருக்கிறார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More