2017 ஜனவரி 04 ஆம் திகதி (நாளை) யாழ்ப்பாணத்தில் இடம்பெறவிருந்த ‘ஜனாதிபதியிடம் தெரிவிக்க’ செயற்றிட்டத்தின் பிராந்திய அலுவலக திறப்பு நிகழ்வு தவிர்க்க முடியாத காரணங்களால் பின்போடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் ”ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்” குறைகேள் அலுவலகம்
Jan 3, 2017 @ 17:04
”ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்” என்ற ஒரு புதிய குறைகேள் அலுவலகமொன்று யாழ்ப்பாணத்தில் ஜனவரி 04ஆம் திகதி திறக்கப்படுகிறது. வட மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் திறக்கப்படும் இந்த அலுவலகம் இத்திட்டத்தின் கீழான முதலாவது பிராந்திய அலுவலகமாகும்.
“ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்“ என்ற மக்களின் குறைகளைக் கேட்கும் அலுவலகம் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னரே கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் இயங்கிய மேற்படி அலுவலகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட பெரும்பாலான மகஜர்களுக்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறான ஒரு நிலையத்தை யாழ்ப்பாணத்தில் திறந்துதவுமாறு வட பகுதி மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு செவி சாய்க்கப்பட்டு இப்போது யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி குறை கேள் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வட பகுதி மக்கள் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் பிரத்தியேக அதிகாரிகளிடம் சென்று தமிழ் மொழியில் தமது பிரச்சினைகளை நேரில் கையளிக்கலாம் அல்லது மகஜர்களை தொலைபேசி, கைபேசி அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ அத்துடன் இணையத்தின் மூலமோ தொடர்பு கொண்டு பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதிக்கே தெரிவிக்கவும் முடியும்.
இந்த நடைமுறையை அமெரிக்காவில் ஒபாமாவும் இந்தியாவில் மோடியும் ஏற்கனவே மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிய வருகிறது. ‘ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்’ பற்றி வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு.
“ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்”செயற்றிட்டம்
தனது பதவிக்காலத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு 08.01.2016 ஆம் திகதி “ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்” செயற்றிட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அரச சேவைகளை வழங்கும் செயன்முறையினை வலுப்படுத்துவதன் மூலம் பொதுமக்களின் பிரச்சினைகள், குறைகள், ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை வினைத்திறனான முறையிலும், இலகுவாகவும் ஜனாதிபதி அவர்களிடம் முன்வைப்பதற்கும், அவற்றிற்குரிய பதில்கள் மற்றும் தீர்வுகளை பயனுறுதியான முறையில் விரைவாகப் பெற்றுக் கொடுப்பதற்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.
1919 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அரச தகவல் மையத்தை தொடர்பு கொள்வதனூடாகவோ அல்லது இணையம், மின்னஞ்சல் மற்றும் கடிதம் மூலமாக ஜனாதிபதி செயலகத்தை தொடர்பு கொள்வதனூடாகவோ பொதுமக்கள் தமது முறைப்பாடுகள், குறைகள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்கக்கூடிய வாய்ப்பு “ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்” செயற்றிட்டத்தினூடாக வழங்கப்பட்டுள்ளது.
பெறப்படும் முறைப்பாடுகள் ஜனாதிபதி செயலகத்தின் பொதுமக்கள் தொடர்பு பிரிவினால் பரிசீலிக்கப்படுவதுடன், அம்முறைப்பாடுகள் / குறைகள் பற்றிய மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஏற்புடைய அமைச்சு அல்லது நிறுவனத்திடம் சமர்ப்பிக்கப்படும்.
மேற்கூறப்பட்ட அனைத்து விடயங்களும் நவீன தொழில்நுட்ப வசதிகளின் பயன்பாட்டுடன் உருவாக்கப்பட்ட கணனித் தரவு தொகுதியினூடாக வினைத்திறனான முறையில் செயற்படுத்தப்படுகின்றன.
‘ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்’ முதற்கட்டத்தில்
இதுவரை பெறப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை : 1,00,671
தீர்வு காணப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை : 34,902
விசாரணையிலுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை : 49,085
பரிசீலிக்கப்படுவதற்கு மீதமுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை : 16,684
இந்நிலையில் “ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்” செயற்றிட்டத்தை மிகவும் பயனுறுதியாக்குவதற்காக அதன் இரண்டாம் கட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் செயற்படுத்தப்படுகிறது.
2017 ஜனவரி 04 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள பணிகள்
1. “ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்” செயற்றிட்டத்தின் முதலாவது பிராந்திய அலுவலகம் வட
மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் 2017 ஜனவரி 04 ஆம் திகதி திறந்து வைத்தல்.
a. அப்பிரதேச மக்கள் தமது முறைப்பாடுகள், குறைகள், ஆலோசனைகள் மற்றும்
முன்மொழிவுகளை கையளிக்கும் செயன்முறை அன்றைய தினத்திலிருந்து ஆரம்பிக்கப்படும்
b. ஜனாதிபதி செயலகத்தின் அலுவலர்கள் அப்பிராந்திய அலுவலகத்தில் நியமிக்கப்படுவதுடன்,
முறைப்பாடுகளுக்கான தீர்வுகளை அவ்வலுவலகத்திலேயே பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பும்
கிடைக்கும்.
2. இணைய வாயிலாக முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளல்
a. “ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்” செயற்றிட்டத்திற்கு சமகாலத்தில் இணைய வாயிலாக
மனுக்களை சமர்ப்பிக்கக்கூடிய முறையொன்றும் அறிமுகப்படுத்தப்படும்.
b. பொது பிரச்சினைகள், ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை இதனூடாக
சமர்ப்பிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
c. சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுக்களில் எந்தவொரு பிரஜையும் இணையத்தினூடாகவே
கையொப்பமிடக்கூடிய வசதியும் ஏற்படுத்தப்படும்.
d. எந்தவொரு மனுவிலும் தமது கையொப்பத்தினை இடுவதற்கு 30 நாட்கள் காலம்
பொதுமக்களுக்கு வழங்கப்படுவதுடன், உரிய காலப்பகுதியினுள் 10,000 க்கும் மேற்பட்ட
கையொப்பங்களை கொண்ட மனுக்கள் ஜனாதிபதியினால் ஏற்புடைய அமைச்சு நிறுவனத்திற்கு
சமர்ப்பிக்கப்பட்டு உத்தியோகபூர்வ தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படும்.
3. “ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்” கையடக்க தொலைபேசி உள்ளீடு
a. இந்த கையடக்கத் தொலைபேசி உள்ளீட்டினை செயற்படுத்துவதன் மூலமாக பொதுமக்கள் தமது
பிரச்சினைகள், குறைகள், ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவும்,
பின்னாய்வு செய்யக்கூடிய வாய்ப்பும் ஏற்படும்.
b. முதலில் அன்ரோயிட் (Anroid) செயற்படுத்தல் தொகுதி ஊடாக இவ்வசதி
ஏற்படுத்தப்படுவதுடன், எதிர்காலத்தில் iOS, Windows செயற்படுத்தல் தொகுதிகளின் ஊடாகவும்
செயற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் செயற்றிட்டத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய வழிவகைகள்
1. 1919 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளல்.
2. http://tell.president.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்தல்.
3. தபால் பெட்டி இலக்கம் 123, கொழும்பு என்ற முகவரிக்கு கடிதம் அனுப்புதல்.
4. [email protected] எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புதல்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2017.01.03