குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி இன்று வியாழக்கிழமை 05-01-2017 ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒன்று கூடிய மாவீரா்களின் உறவினா்கள் மற்றும் முன்னாள் போராளிகள் சிலா் இந்தப் பணியை ஆரம்பித்துள்ளனா்.
யுத்தம் முடிவுக்கு வந்தப் பின்னா் கடந்த வருடம் மாவீரா் நாள் கொண்டாடுவதற்கு அனுமதியளிக்கப்பட்ட போதும் அப்போது வெறும் தரையில் சிதைக்கப்பட்ட கல்லறை மற்றும் நினைவுக் கற்களின் எச்சங்களை குவித்து அதன் முன் விளக்கேற்றி நினைவு கூரப்பட்டது.
இந்தநிலையில் துயிலுமில்லத்தை வழமை போன்று மாற்றி அமைக்கும் வரைக்கும் ஒரு பொதுவான நினைவுச் சமாதியினை அமைத்து நினைவு கூருவதற்கு தீா்மானித்து அந்தப் பணிகளை இன்று ஆரம்பித்துள்ளோம். எனத் தெரிவித்த மாவீரா்களின் உறவினர்கள் தாம் கொண்டு சென்ற செங்கற்கள், சீமெந்து என்பவற்றைக் கொண்டு நினைவுச் சமாதி அமைக்கும் ஏற்பாடுகளை முன்னெடுத்தனா்.
முன்னதாக முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவா் அடிக்கல் வைத்து ஆரம்பித்து வைக்க ஏனையவா்களாலும் அடிக்கல் நாட்டப்பட்டு பொதுச் சமாதி அமைக்கும் பணிகள் தொடா்ந்து முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின ஊடக தொடா்பாளா் அ.ஈழம் சேகுவேரா துயிலுமில்லத்தை வைத்து எவரும் அரசியல் செய்ய நாம் அனுமதிக்க முடியாது எனவும் கடந்த மாவீரா் நாளன்று கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் மிக மோசமான அரசியல் அசிங்கம் நடந்தேறியது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு குடும்பத்தில் இரண்டு மூன்று பிள்ளைகளை மண்ணுக்காக அா்ப்பணித்தவா்கள் இருக்க எவ்வித தியாகமும் செய்யாத ஒருவா் விளக்கேற்றினாா். அவரது குடும்பத்தில் பன்னிரண்டு சகோதரர்கள் எவரும் இந்த மண்ணுக்காக எந்த தியாகத்தையும ்செய்யவில்லை எனவும் மாறாக இந்தப் போராட்டத்தை வைத்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவா்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே இவ்வாறனவா்கள் மாவீரா் துயிலுமில்லத்தில் அரசியல் செய்வதனை நாம் மட்டுமல்ல தமிழ் மக்கள் எவரும் விரும்ப மாட்டாா்கள் எனவும் கிளிநொச்சியில் நிலவுகின்ற அரசியல் சூழ்நிலையில் இந்த சமாதியை இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினா் ஒருவர் உடைத்துவிட்டு இராணுவ புலனாய்வுப்பிரிவினா் மீது பழியை சுமதிவிடலாம், அல்லது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் உடைந்துவிடலாம் அவ்வாறான நிலைமையே காணப்படுகிறது எனவும் தெரிவித்தாா்.
இதேவேளை கு. பிரபாகரன் ( எழிலன்) எனும் முன்னாள் போராளி கருத்து தெரிவித்த போது மாவீரா் துயிலுமில்லங்களை புனரமைக்க தயவு செய்து புலம் பெயர் உறவுகள் எந்தவொரு அரசியல்வாதிகளிடம் நிதியை வழங்காதீர்கள் அப்படி வழங்கினால் அதிலும் அவா்கள் ஊழல் செய்வாா்களே தவிர திருப்தியான பணிகள் இடம்பெறாது எனத் தெரிவித்தார்.
கடந்த காலத்திலும் என் போன்ற முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்டவா்கள் உட்பட முன்னாள் போராளிகளை வைத்து இந்த அரசியல் வாதிக்ள கோடிக்கணக்கான நிதியை வெளிநாடுகளில் இருந்து திரட்டியிருக்கினறாா்கள். ஆனால் என்ன நடந்தது. எதுமில்லை யாருக்கு எதிராக ஆயுதம் ஏந்தினோமோ அவா்களிடம் வேலை கேட்டுசெல்கின்ற அவலம்தான் நடந்துள்ளது. எங்களின் பெயரால் சேகரிக்கப்பட்ட நிதி அவா்களின் வங்கி கணக்கையே நிரப்பியுள்ளது. எனவும் தெரிவித்தாா்.