குளோபல் தமிழ் செய்தியாளர்
பரீட்சை எழுதிக்கொண்டு இருக்கும் மாணவி விபத்துக்கு உள்ளாகி உள்ளார் என முறைப்பாடு பதிவு செய்த சம்பவம் ஒன்று யாழ்.காவல் நிலையத்தில் இடம்பெற்று உள்ளது. குறித்த முறைப்பாடு தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் எஸ்.சதிஸ்தரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த சம்பவம் வெளி வந்து உள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ,
கடந்த மாதம் 14ம் திகதி மதியம் யாழ்.காங்கேசன்துறை வீதி , மனோகர சந்திக்கு அருகில் திடீரென வீதிக்கு குறுக்காக ஓடிய மாணவி, யாழ்.நகரில் இருந்து கொக்குவில் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளாகி இருந்தார்.
அதில் மாணவி சிறு காயங்களுக்கு உள்ளாகி இருந்தார். அதனை அடுத்து விபத்துக்கு உள்ளாக்கியவரின் உறவினர் மாணவியை யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிசைக்காக அனுமதித்தார்.
யாழ்.போதனா வைத்திய சிகிச்சை பெற்ற மாணவி வீடு திரும்பி 16ம் திகதி உயர்தர பரீட்சையின் ஆங்கில பரீட்சையிலும் தோற்றியுள்ளார்.
அந்நிலையில் அன்றைய தினம் (16ம் திகதி) மாணவி பரீட்சை எழுதிக்கொண்டிருந்த நேரம் யாழ்.காவல் நிலையத்தில் மாணவியின் பெயரில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு முறைப்பாட்டு கொப்பியில் மாணவியின் கையொப்பமும் வைக்கப்பட்டு உள்ளது.
தான் விபத்துக்கு உள்ளானதாகவும் , தன்னை விபத்துக்கு உள்ளாக்கியவர் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்று விட்டார் எனவும் மாணவியின் கையொப்பத்துடன் யாழ்.காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவியின் பெயரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் விபத்தினை ஏற்படுத்தியவரை யாழ். காவல்துறையினர் அழைத்து வாக்கு மூலம் பதிவு செய்தனர்.
அதன் போது மஞ்சள் கடவையில் வைத்தே விபத்தினை ஏற்படுத்தியதாகவும் , விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்று விட்டேன் என வாக்கு மூலத்தில் கூறுமாறு விபத்தினை ஏற்படுத்தியவரை காவல்துறையினர் மிரட்டி உள்ளனர்.
அதற்கு விபத்தினை ஏற்படுத்தியவர் சம்மதிக்காது , மாணவி வீதியின் குறுக்க ஓடியமையால் தான் விபத்து ஏற்பட்டதாகவும் , தனது உறவினரே மாணவியை வைத்திய சாலையில் அனுமதித்ததாகவும் தெரிவித்து தனது வாக்கு மூலத்தை பதிவு செய்தார்.
அந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) யாழ்.நீதிவான் நீதிமன்றில் விபத்தினை ஏற்படுத்தியவருக்கு எதிராக ஆறு குற்ற சாட்டுக்களை முன் வைத்து யாழ்.காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு தாக்கல் செய்தனர்.
அதன் போது விபத்தினை ஏற்படுத்தியவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் , தமது தரப்பினர் மீதான ஆறு குற்ற சாட்டுக்களில் மூன்றினை தாம் ஏற்றுக்கொள்வதாகவும், ஏனைய மூன்று குற்றசாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.
அத்துடன் விபத்து நடந்தது 14ம் திகதி , ஆனால் காவல்துறையினர் விபத்து நடந்தது 16ம் திகதி என முறைப்பாடு பதிவு செய்துள்ளனர் அத்துடன் 16ம் திகதி விபத்துக்கு உள்ளான மாணவி யாழில் உள்ள பிரபல பாடசாலையில் பரீட்சை எழுதி உள்ளார்.
மாணவி பரீட்சை எழுதிக்கொண்டு இருந்த அதே நேரம் யாழ்.பொலிஸ் நிலையத்தில் மாணவியின் கையொப்பத்துடன் தான் விபத்துக்கு உள்ளாகி உள்ளேன் என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது எவ்வாறு ? மாணவி ஒரே சமயத்தில் பரீட்சையும் எழுதிக்கொண்டு எவ்வாறு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்து இருக்க முடியும் என மன்றில் கேள்வி எழுப்பினார்.
அதனை தொடர்ந்து நீதிவான் விபத்தினை ஏற்படுத்தியவர் ஏற்றுக்கொண்ட மூன்று குற்றத்திற்கும் 7ஆயிரத்து 500 ரூபாய் தண்ட பணம் விதித்தத்துடன் 50ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்லவும் அனுமதி வழங்கியதுடன் , வழக்கினை எதிர்வரும் மே மாதம் 5ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இதேவேளை விபத்துக்கு உள்ளான மாணவியின் தந்தை யாழில் உள்ள பிரபல விருந்தினர் விடுதியில் பணியாற்றுபவர் என்றும் அவருக்கு யாழ்.பொலிஸ் நிலையத்தில் செல்வாக்கு உண்டு எனவும் அதனாலையே தம் மீது பொய் முறைப்பாடு கொடுத்து உள்ளார் எனவும் விபத்தினை ஏற்படுத்தியவர் தெரிவித்துள்ளார்.