குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
துருக்கியில் மேலும் 6, 000 அரச உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற இராணுவ சதிப் புரட்சி முயற்சியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் அந்நாட்டின் பெரும் எண்ணிக்கையிலான அரச அதிகாரிகள் பணி நீக்கப்பட்டுள்ளதுடன், பணி இடைநிறுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
ஏற்கனவே சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான அரச பணியாளர்கள், பணி இடைநிறுத்தத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் பெரும் எண்ணிக்கையிலான ஊடக நிறுவனங்களையும் அரசாங்கம் முடக்கியுள்ளது.
அண்மையில் பணி நீக்கப்பட்டுள்ளவர்கள் விபரம் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 2700 காவல்துறை உத்தியோகத்தர்களும் உள்ளடங்குகின்றனர். துருக்கியில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவசரகாலச் சட்டத்தின் அடிப்படையில் பணி நீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.