குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பத்து ஆண்டுகளில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை லாபமீட்டச் செய்வதே எமது நோக்கம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பத்து ஆண்டுகளில் லாபமீட்டச் செய்யும் நோக்கில் அப்போதைய அரசாங்கம் செயற்பட்டு வந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பிலான உடன்படிக்கை குறித்து அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 15,000 ஏக்கர் காணி சீனாவிற்கு வழங்குவது இலங்கையின் பொருளாதாரத்திற்கு தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று என சுட்டிக்காட்டியுள்ள அவர் காணிகளை பாதுகாத்துக் கொள்ள மக்கள் நடத்திய அமைதியான போராட்டம் மீது தாக்குதல் நடத்தியதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இறைமை மற்றும் இயற்கை வளம் தொடர்பில் கவனம் செலுத்தியே இவ்வாறான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.