யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதார உத்தியோகத்தர்கள் 40 பேர் கொண்ட குழுவினர் இணைந்து இன்று 12.01.17 நெடுந்தீவில் விசேட மருத்துவ முகாம் ஒன்றை நடாத்தினர்.
இதில் 555 பேர் பயன் பெற்றனர். நெடுந்தீவு யாழ்ப்பாணத்திலிருந்து தொலைவில் இருக்கும் ஒரு பிரதேசம். இங்கு மருத்துவ வசதிகள் மிகவும் குறைவாகக் காணப்படுகின்றது. நெடுந்தீவு பிரதேச வைத்திய அதிகாரி மற்றும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் வேண்டுகோளை அடுத்து பல்வேறு வைத்திய நிபுணர்கள் இவ் வைத்திய முகாமில் கலந்து கொண்டனர். காலை 8.30 மணி முதல் மாலை 2.30 மணி வரை இம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
காது மூக்கு தொண்டை விசேட வைத்திய நிபுணர், அகஞ்சுரக்கும் தொகுதியியல் விசேட வைத்திய நிபுணர், மூட்டு வாத நோய் சிகிச்சை விசேட வைத்திய நிபுணர், புற்றுநோய் சிகிச்சை நிபுணர், பொது வைத்திய நிபுணர் முதலானோருடன் இணைந்து ஏனைய மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள். 70 சிறுவர்கள் உட்பட 555 பேர் இம் முகாமில் பயன்பெற்றனர். இவர்கள் அனைவருக்கும் குருதியில் குளுக்கோஸின் அளவு பரிசோதிக்கப்பட்டது. தேவையானவர்களுக்கு குருதியில் கொழுப்பின் அளவு பரிசோதிக்கப்பட்டது.
இம் முகாமில் புதிதாக நீரிழிவு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். தேவையானவர்களுக்கு யாழ் போதனா வைத்தியசாலைக்கு வந்து மேலதிக சிகிச்சை பெறவதற்கான மருத்துவ அறிவுறுத்தல்கள் , ஒழுங்குகள் செய்யப்பட்டது.
யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அனுசரணையில் நடைபெற்ற இம் மருத்துவ முகாமிற்கு நெடுந்தீவு கடற்படை உத்தியோகத்தர்கள் கடற்போக்குவரத்து மற்றும் உணவு வழங்கல் அனுசரணை வழங்கியிருந்தனர். மேலதிகமான உதவிகளை அனைத்துலக மருத்துவக் குழுவினர் வழங்கினர்.
நெடுந்தீவில் 4 மாதங்களுக்கு ஒரு தடவை இவ்வாறான விசேட மருத்துவ முகாம் நடைபெறும் என்று யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிக்கின்றார்.