கொழும்பு விசேட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள 38 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள், சிங்கள பிரதேசமான ஹோமாகமைக்கு மாற்றப்படுவதை தடுக்கும் வகையில், நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலரின் வழக்குகளை கொழும்பிற்கு வெளியில் கொண்டுசெல்வதானது, அவர்களின் விடுதலையை மேலும் இழுத்தடிக்கும் செயலென கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிரமலநாதன் குற்றம்சாட்டியிருந்த நிலையிலேயே குறித்த விடயம் தொடர்பில் நீதி அமைச்சருடன் கலந்துரையாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.