குளோபல்தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை வழங்கும் முயற்சிகளை அரசாங்கம் கைவிட்டால், அரசியல் சாசனம் அமைக்கும் நடவடிக்கையிலிருந்து விலகிக்கொள்ள நேரிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கூடுதலான அதிகாரப் பகிர்வு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக வழங்கப்பட வேண்டும் என்றே மக்கள் ஆணையிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தை முழுமையான அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டமாக ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புக்களை அரசாங்கம் கைவிட்டால் அரசியல் சாசனம் அமைக்கும் பணிகளில் தொடர்ந்தும் இணைந்திருக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சமஸ்டி முறை ஆட்சிக்கு அனுமதியளிக்கப்படாது என அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.