குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டின் தற்போதைய அரசியல் சாசனம் காலாவதியாகியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற கட்சியின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர் இன்றைய கால தேவைக்கு ஏற்ற வகையில் அரசியல் சாசனம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகும் என குறிப்பிட்டுள்ளார்.
1978ம் ஆண்டு அரசியல் சாசனத்தினை எதிர்த்து வந்த தரப்பினர் தற்போது அதனை மாற்றக்கூடாது என கோருவது சுவராஸ்மானது எனவும் நிறைவேற்று அதிகாரம் மற்றும் புதிய அரசியல் சாசனம் பற்றி இதுவரையில் பேசப்படாத காரணத்தினால் தற்போதைக்கு ஜனாதிபதி தேர்தல் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தெரிவு செய்தது போன்றே யாருக்கும் தெரியாமல் ஐக்கிய தேசியக் கட்சி அடுத்த தேர்தல் தொடர்பிலும் தீர்மானம் எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் சில சந்தர்ப்பங்களில் அங்கம் வகிக்கும் தரப்பினருக்கு இடையில் கொள்கை அடிப்படையில் முரண்பாடுகள் காணப்பட்டாலும் அரசாங்கம் சரியான தீர்மானங்களே இறுதியில் எடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.