தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வருவதால் ஜல்லிக்கட்டு வழக்கில் உடனே தீர்ப்பு அளிக்கக் கூடாது என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
மத்திய அரசின் சட்டமா அதிபர் முகுல் ரோத்தகி உச்சநீதிமன்றத்தில் முன்னிலையாகி ஜல்லிக்கட்டு வழக்கில் இப்போதைக்கு தீர்ப்பளிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு வர உள்ளது. எனவே இது உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என முகுல் ரோத்தகி கேட்டுக்கொண்டதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பினை ஒத்திவைத்துள்ளனர்.
இதனால் தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் உச்சநீதிமன்றம் தடை விதிக்க வாய்ப்பில்லை எனவும் அவசர சட்டம் பிறப்பித்த உடன் உடனே அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் இது தற்காலிக தீர்வுதான். எங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காமல் நாங்கள் போராட்ட களத்தில் இருந்து விலகப் போவதில்லை என போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.