Home இலங்கை வடக்கு முதல்வர் முஸ்லிம்களுக்கு எதிரானவர் இல்லை – வட மாகாண சபை உறுப்பினர் றயிஸ்

வடக்கு முதல்வர் முஸ்லிம்களுக்கு எதிரானவர் இல்லை – வட மாகாண சபை உறுப்பினர் றயிஸ்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடக்கு மாகாண முதலமைச்சர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஷ்வரன் வடபுல முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதாகவும் முஸ்லிம்களை புறக்கணித்து வட மாகாணசபையின் அரசியலை அரங்கேற்றுவதாகவும் சிலர் சமூக வலைத்தளம் ஊடாகவும், பத்திரிகை அறிக்கைகள் மூலமாகவும், தனிப்பட்ட ஊடகங்கள் மூலகமாகவும்   விமர்சித்து  வருவதை வடக்கு மாகாண சபை உறுப்பினர் முகமது றயீஸ் மறுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது

வடக்கு முதல்வர் ஒருபோதும் வடக்கு முஸ்லிம்களின் எதிராளி அல்ல முஸ்லிம்கள் தொடர்பாக முதலமைச்சர் கரிசனையுடன் செயற்படுகின்றார் என்பதற்கு பல உதாரணங்களை என்னால் முன்வைக்க முடியும்.

வடமாகாண சபை அமைக்கப்பட்டதன் பின்பு அதிகளவான காணியுறுதிப்பத்திரங்களை  வடக்கு முஸ்லிம்களுக்கு குறிப்பாக வன்னி மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார். அவ்வகையில் வவுனியா சாளம்பைக்குளம் கிராமத்தில் சுமார் 272 குடும்பத்திற்கும்  செட்டிகுளம், சூடுவெந்த புலவு, பாவற்குளம் போன்ற பிரதேசத்தில் 133 குடும்பத்திற்கும்  அதே போன்று மன்னார் மாவட்டத்தின் முசலி மருதமடுவில் 210 குடும்பத்திற்கும், வேப்பங்குளத்தில் 348 குடும்பத்திற்கும்,  கரடிக்குளியில் 424 குடும்பத்திற்கும், பாலைக்குளி கிராமத்தில் 238 குடும்பத்திற்கும்  ஏனைய பிரதேசங்களில் குறிப்பிட்ட தொகையினரும் உள்ளடங்களாக 3000 ற்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் தத்தம் காணியுறுதிகளை பெற்றுக்கொள்ள வடமாகாணசபை மேற்கொண்ட பிரயத்தனம் தொடர்பாக வடக்கு முஸ்லிம்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.

அத்துடன்  அபிவிருத்தி செயற்பாடுகளிலும் வடமாகாண சபையோ வடக்கு முதல்வரோ முஸ்லிம்களை புறக்கணிக்கவில்லை என்பதற்கு சான்றாக சென்ற வருடம் முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியால உட்கட்டமைப்பு விருத்திக்கு ஒரு கோடி ரூபா ஒதுக்கி அதன் வேலைகள் முடியும் தறுவாய்க்கு வந்துள்ளது. மேலும்  முதலமைச்சரின் பணிப்பின்பேரில் வீதி அபிவிருத்திக்காக போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்கள் 60 லட்சம் ரூபாவினை ஒதுக்கி அவ்வேளைகள் பூர்த்தியடைந்துள்ளது.இதற்காக முதலமைச்சருக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளை தொிவித்துக் கொள்கிறேன்.

மேலும்  முதலமைச்சர் அவர்கள் மீள் குடியேறும் மக்களுக்கான வீட்டுத்திட்டத்தில் பயனாளி தெரிவில் முஸ்லிம்களுக்கான பங்கு சமமானதாக இருக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் பணிப்பினை நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.  உண்மையில் சிறுபான்மை சமூகத்திற்கான அரசியல் தீர்வு ஒன்றினை பெற்றுக்கொள்ளும் போது அது முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்துபவர் வட மாகாண முதலமைச்சர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற மாபெரும் மக்கள் இயக்கங்கள் இணைந்து உருவாக்கியிருக்கின்ற சகோதரத்துவ அரசியலை பொறுத்துக்கொள்ளமுடியாத, தமிழ் முஸ்லிம் உறவினை சீர்குலைப்பதன் மூலம் தனது அரசியலை நிலை நாட்ட துடிக்கின்ற ஒரு மத்திய அமைச்சரும் அவரது கட்சி உறுப்பினர்களுமே வடக்கு முதல்வருக்கெதிரான பிரச்சாரங்களை அவிழ்த்து விட்டிருக்கின்றார்கள்.

வடபுல முஸ்லிம்கள் இப் பொய்ப் பிரச்சாரங்கள் தொடர்பாக அச்சம் கொள்ளத் தேவையில்லை. அத்துடன் எனது கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் கௌரவ ரவூப் ஹகீம் அவர்களுக்கும் தமிழ் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான கௌரவ சம்பந்தன் ஐயா அவர்களுக்கும் இடையில்  ஒரு புரிந்துனர்வு மிக்க தூர நோக்குடைய அரசியல்தொடர்பும் இருந்து வரும் நிலையில் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படாத விடயங்களில் தமிழ் கூட்டமைப்புடன் ஒரு நட்புறவு  அரசியலையே தலைவர் ரவூப் ஹகீம் அவர்களின் வழி காட்டலில் செய்து வருகிறேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர்களான அய்யூப் அஸ்மீன்,ஜவாஹீர் ஜனூபர் ஆகியோர் முஸ்லீம் மக்களுக்கு எவ்வித சேவையும் முதலமைச்சர் செய்யவில்லை என பகிரங்கமாக தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More