185
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜல்லிக்கட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவது ஒரு துர்ப்பாக்கிய நிகழ்வாகும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற உழவர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளாக ஜல்லிக்கட்டு அல்லது ஏறு தழுவல், போட்டிகளில் மக்கள் ஈடுபடுவதுடன் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்களுக்கு அதற்கென விசேட பயிற்சிகள் அளிக்கப்பட்ட சிறந்த காளைகள் கொண்டுவரப்பட்டு அக்காளைகளை அடக்குகின்ற போட்டிகள் மஞ்சுவிரட்டு, வட்ட மஞ்சுவிரட்டு, வெளிவிரட்டு எனப் பலவிதமாக முன்னெடுக்கப்படுவன.
மஞ்சுவிரட்டு என்பது விளையாட்டுத்திடலில் வீறுகொண்டு நுழைகின்ற காளையை குறிப்பிட்ட தூரத்தில் அதன் ஏரியை அதாவது முதுகுப்புற மேற்பாகத்தை அழுத்திப்பிடித்து அடக்குவது.
வட்டமஞ்சுவிரட்டு என்பது பத்து மீற்றர் நீள கயிற்றில் கட்டப்பட்ட திமிறுகின்ற காளையை ஏரியைப்பிடித்து அடக்கி நிலத்தில் விழ வைப்பது. மூன்றாவது வகை வெளிவிரட்டு. இது திறந்த வெளியில் அல்லது வீதியில் ஓடுகின்ற காளையை துரத்திப்பிடித்து அடக்கி பணிய வைப்பது. இவ்விளையாட்டுக்களில் ஆதிகாலத்தில் திருமணம் செய்ய இருக்கின்ற இளைஞர்களும் ஈடுபடுவார்கள். ஜல்லிக்கட்டு அல்லது ஏறுதழுவல், மற்றும் இளவட்டக்கல் தூக்கல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற ஆடவர்களை மட்டுமே வசதி படைத்த திருமண நங்கைகள் தமது துணைவர்களாக அந்தக் காலத்தில் தெரிவு செய்வர்.
இந்நிகழ்வுகள் மனிதர்களுக்கு மட்டும் உரித்தான போட்டிகள் என்று கூற முடியாது. பறவைகள், விலங்குகள், பூச்சியினங்கள் கூட வீரியமுள்ள சந்ததியைத் தோற்றுவிப்பதற்காகப் பலம் பொருந்திய துணையைத் தேர்வு செய்வன. அவற்றின் பலமானது பலவிதங்களில் பரீட்சிக்கப்படுவன.
ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்தியாவில் பன்நெடுங்காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த போதும் கடந்த ஒரு சில ஆண்டுகளாக இப் போட்டிகளை அரசு தடுத்து நிறுத்த முயல்வதும் அதற்கு எதிராக பல அணிகள் போர்க்கொடி தூக்குவது தமிழ் நாட்டில் இடம்பெற்றுவருவதும் ஒரு துர்ப்பாக்கிய நிகழ்வாகும்.
இருசாராரும் முன்வைக்கின்ற விடயங்களில் பல உண்மைத்தன்மைகள் காணப்படுகின்ற போதும் தொன்றுதொட்டு இடம்பெற்று வந்த பாரம்பரிய விளையாட்டுக் கலைகளை திடீரென்று மாற்றுவது சமூகச் சிக்கல்களை ஏற்படுத்தும். அது தான் இன்று தமிழ் நாட்டில் பூதாகரமாக வெடித்துள்ளது.
நேற்றைய தினம் தொடர்புடையவர்கள் சில உடன்படிக்கைகளுக்கு வந்துள்ளாதாகக் கேள்வி. பொறுமையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் இப்பிரச்சனையை அணுகி உரிய தீர்வைப் பெற முயற்சிக்க வேண்டும்.
படித்த இளைஞர்கள் விவசாயம் செய்ய முன்வர வேண்டும்.
இந்த வகையில் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை உடைய தமிழ் மக்கள் “சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்”; என்ற கருப்பொருளுக்கு அமைவாக பல தொழில்களிலும் சுற்றித்திரிந்து ஈற்றில் ஏரால் உழும் தொழிலைச் செய்யும் உழவர்களைப் பின்பற்றியே உலகம் செல்லும் என்ற வள்ளுவன் வாக்கிற்கு வளம்சேர்ப்பவர்களாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவது எமக்கு மகிழ்வைத் தருகின்றது. எமது படித்த வாலிபர்கள் பலர் விவசாயத்தில் ஈடுபட வேண்டும்.நவீன தொழில்நுட்ப அறிவுடன் விவசாயத்தில் தன்னிறைவைக் காண எமது படித்த வாலிபர்கள் முன்வரவேண்டும்.
தமிழ் மக்களின் விவசாய காணிகளை கையகப்படுத்தியவர்கள் மீள ஒப்படைப்பார்கள் என எதிர்ப்பார்க்கிறேன்.
தமிழ் மக்கள் விவசாயத்தின்பால் கொண்டுள்ள நாட்டத்தையும் விவசாயத்தின் மூலம் அவர்கள் பெற்றுக் கொள்கின்ற நன்மைகளையும் கண்ணுற்ற பலர் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை கையகப்படுத்துவதில் குறியாக இருக்கின்றார்களோ என்று எண்ண வேண்டியுள்ளது.
விரைவில் இவ்வாறு கையகப் படுத்தியுள்ளவர்கள் தாம் குடியேறி இருக்கும் காணிகளை மக்களிடம் திரும்பக் கையளிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.
தரிசு நிலங்களை விவசாய அமைச்சு பொறுப்பு ஏற்க வேண்டும்.
எது எவ்வாறு இருப்பினும் எமது மக்களின் விவசாய நிலங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். எமது தரிசு நிலங்களில் ஒரு சிறு பகுதிகூட விவசாய முயற்சிகளுக்கு பயன்படுத்தாது எஞ்சியிருக்கக் கூடாது. ஏதாவது காரணங்களால் சில நிலங்களில் விவசாய நடவடிக்கைகள் தொடர முடியாத விடத்து அக் காணிகளை தற்காலிகமாகவேனும் விவசாய அமைச்சு பொறுப்பேற்று அந் நிலங்களில் தோதான விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதன்மூலம் எமது உற்பத்திகள் அதிகரிப்பதுடன் நிலங்களும் பாதுகாக்கப்படுவன.
வெளிநாட்டில் உள்ள நில சொந்தக்காரர்களுடன் ஒப்பந்தம் செய்து அனலைதீவு போன்ற இடங்களில் இருக்குந் தரிசு நிலங்கள் எமது விவசாய அமைச்சினால் பொறுப்பேற்று சொந்தக்காரர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாமல் நன்மைதரும் பயிர்ச் செய்கைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும். எவ்வாறு மழைநீர் ஒருதுளி கூட கடலை அடையாது சேமிக்கப்பட வேண்டுமோ தரிசு நிலங்களும் உரியவாறு பயன்படுத்தாமல் வெட்டியாக வைத்திருக்கப்படாது நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். என தெரிவித்தார்.
Spread the love