குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக காவல்துறைத் தலைமையக வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அண்மையில் லசந்த கொலை தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதியும், இந்நாள் அமைச்சருமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவிடம் ஐந்து மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டிருந்தது. இந்த விசாரணைகளின் அடுத்த கட்டமாக கோதபாய ராஜபக்ஸவிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
குற்ற விசாரணைப் பிரிவினர் விரைவில் கோதபாயவை அழைத்து லசந்த கொலை தொடர்பில் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோதபாய ராஜபக்ஸவுடன் மேலும் கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் உயர் பதவிகளை வகித்த சில பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
லசந்த படுகொலையுடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு தொடர்பு உண்டு என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.